ஜவுளித்துறை சார்ந்த கண்டுபிடிப்பு கண்காட்சி!அடுத்த மாதம் திருப்பூரில் துவக்கம்

தினமலர்  தினமலர்

திருப்பூர்;நாடு முழுவதும் உள்ள, எட்டு ஆய்வு மையங்களை ஒருங்கிணைத்து, திருப்பூரில் ஜவுளித்துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி, வரும் பிப்ரவரி மாதம் நடக்கிறது.
திருப்பூரின் வர்த்தக மதிப்பை, ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு செயல்வடிவம் கொடுக்க, ஆடை உற்பத்தி துறையினர், நாட்டின் வெவ்வேறு நகரங்களில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையங்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக, தேசிய அளவிலான ஜவுளித் துறை கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், முதல்முறையாக திருப்பூரில் நடத்த உள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், நிப்ட்--டீ கல்லுாரி, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன், இணைந்து, வரும் பிப்ரவரி 8, 9, 10ம் தேதிகளில், ஜவுளி கண்டுபிடிப்பு கண்காட்சியை, அவிநாசி பழங்கரை ரோடு ஐ.கே.எப்., வளாகத்தில் நடத்தவுள்ளன.
கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் (சிட்ரா), அகமதாபாத் ஜவுளி துறை ஆராய்ச்சி கழகம் (அட்டிரா), மும்பை ஜவுளி ஆராய்ச்சி கழகம் (பிட்ரா), வட இந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் (நிட்ரா), சிந்தடிக் மற்றும் ஆர்ட் சில்க் மில்ஸ் ஆய்வு கழகம் (சஸ்மிரா), செயற்கை இழை ஜவுளி ஆராய்ச்சி கழகம் (மந்த்ரா), இந்திய சணல் ஆராய்ச்சி கழகம், கம்பளி ஆராய்ச்சி கழகம் என, எட்டு ஆய்வு மையங்கள், இதில் பங்கேற்கின்றன.
இவை, டெக்னிக்கல் டெக்ஸ்டைல், மருத்துவ ஜவுளி, பின்னலாடை என, ஜவுளி துறை சார்ந்த தங்கள் கண்டுபிடிப்பு துணிகள், தொழில்நுட்பங்களை காட்சிக்கு வைக்க உள்ளன. பல்வேறு தலைப்புகளில், தினமும் கருத்தரங்கம் நடத்தப்படும். தொழில் ஆலோசகர்கள், வல்லுனர்கள் ஆலோசனை வழங்கவுள்ளனர்.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜய குமார் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள ஆய்வு மையங்கள் வசம், ஜவுளி துறை சார்ந்த ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன.அதை அறிந்து, செயல்வடிவம் கொடுக்கும் நோக்கில், திருப்பூரில் இக்கண்காட்சி நடக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் குறித்து, ஆடை உற்பத்தி துறையினர் தெரிந்து கொள்வதால், புதுவகை ஆடை தயாரிக்கலாம்.சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. படைப்புகளை காட்சிப்படுத்த விரும்புவோர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், நிப்ட்--டீ கல்லுாரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை