நடவடிக்கை பாயும்!அரிசி கடத்தல் மீண்டும் அதிகரிப்பு:துணைபோவோருக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்

ஊட்டி;'பொது வினியோக திட்டத்தின் கீழ், விலையில்லா அரிசியை வெளிநபர்களுக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
மீண்டும் அதிகரிப்பு
இந்நிலையில், நீலகிரியில் இருந்து, கேரளா, கர்நாடகாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்பட்டு வந்தது. கடத்தலில் ஈடுபட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்களின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் கடத்தலை தடுக்கும் வகையில், மாநில அரசு 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மாவட்டத்தில், 80 சதவீதம் கார்டுதாரர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கார்டுதாரர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் விலையில்லா அரிசிக்கு மட்டும் ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்த ரேஷன் அரிசி கடத்தல், மீண்டும் தலை துாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, பொது வினியோக திட்டத்தின் கீழ், வழங்கப்படும் அரிசியை சில குடும்ப அட்டைதாரர்கள் மூலம், ரேஷன் கடையிலிருந்து பெற்று வெளிநபர்களுக்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கூறுகையில், ''பொது வினியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் அரிசியை வெளிநபர்களுக்கு விலைக்கு விற்பனை செய்வது கண்டறியும் பட்சத்தில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை விற்பனையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தேவை விழிப்புணர்வு!
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் பொதுவினியோக திட்டம் சிறப்பாக செயல்படவும், நுகர்வோர் குறைகளை களையவும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டங்களில், அத்தியாவசிய பொருட்களில் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் கடத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். அப்போது தான், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகத்துக்கான முழு பயன் கிடைக்கும்' என்றனர்.

மூலக்கதை