மிளிரும் மைதானம்!அரசுப் பள்ளியில் நவீன கூடைப்பந்து 'கோர்ட்':தனியார் நிறுவன பங்களிப்பால் சாத்தியம்

தினமலர்  தினமலர்

கோவை:மலுமிச்சம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், தனியார் நிறுவன பங்களிப்போடு, அதிநவீன கூடைப்பந்து மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற, மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார் பில், விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்க, ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி, வட்டாரம், மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளில், அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்கின்றனர். இதில், சில அரசுப்பள்ளிகள் மட்டுமே, வெற்றி கோப்பையை தனதாக்கி கொள்கின்றன.போதிய உபகரணங்கள் இல்லாமை, பயிற்சி அளிக்க விளையாட்டு ஆசிரியர்கள் இன்றி, திறமை வாய்ந்த மாணவர்களுக்கு, விளையாட்டு கோப்பை, எட்டாக்கனியாக உள்ளது. அரசுப்பள்ளிகளை தேர்ச்சி விகிதத்தோடு, விளையாட்டிலும் முன்னிலைப்படுத்துவது அவசியம். இதற்கு, தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென, கல்வித்துறை அறைகூவல் விடுத்து வருகிறது.கோவை மாவட்டத்தில், தனியார் துறைகளின் பங்களிப்பால், பல அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 'எல் அண்டு டி' நிறுவனம், கூடைப்பந்து மைதானம் உருவாக்க மட்டும், 20 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, இந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சிக்கு, கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன.
வரும் 22ல் திறப்பு விழா
மலுமிச்சம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நந்தக்குமார் கூறுகையில், ''எங்கள் பள்ளி, மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்டது. வாலிபால், கோ-கோ விளையாட்டில், மண்டல அளவில் மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.
கூடைப்பந்து போட்டிக்கு, பிரத்யேக வசதி அமைத்து தர அணுகிய போது, 'எல் அண்டு டி' நிறுவனம் ஒப்புக்கொண்டதோடு, மூன்றே மாதத்தில், இப்பணிகளை முடித்துவிட்டது. வரும் 22ம் தேதி, திறப்பு விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம். மேலும், பிரத்யேக பயிற்சியாளரும் நியமிப்பதாக, இத்தனியார் நிறுவனத்தினர் ஒப்பு கொண்டுள்ளனர்,'' என்றார்.'மெனக்கெடல் வேண்டும்'கோவையில், பல தனியார் நிறுவனங்கள், பொது சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கற்பித்தல், நிர்வாக பணிகளை தாண்டி, பள்ளிகளை மேம்படுத்த, தலைமை ஆசிரியர்கள் மெனக்கெட வேண்டும். மலுமிச்சம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியரின் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இதனால், மாணவர்கள் பயன்பெறுவர்.அய்யண்ணன்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

மூலக்கதை