பொங்கல், குடியரசு தினக் கூட்டத்தைச் சமாளிக்க தென்னக ரயில்வே சிறப்பு நடவடிக்கை!

விகடன்  விகடன்
பொங்கல், குடியரசு தினக் கூட்டத்தைச் சமாளிக்க தென்னக ரயில்வே சிறப்பு நடவடிக்கை!

பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க தென்னக ரயில்வே சார்பாக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் பெட்டிகள், கூடுதல் ரயில்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருப்பதால் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவார்கள் என்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இருந்து பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலைமை உள்ளது. அதனைச் சமாளிக்கும் வகையில் தென்னக ரயில்வே சார்பாக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’பேருந்துத் தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்ற போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைச் சமாளிக்கும் வகையில் மதுரையில் இருந்து இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களில் மொத்தம் 24 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. மேலும், மதுரையில் இருந்து முக்கிய நகரங்களான சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ஆகியவற்றை இணைக்கும் வகையில் மதுரை-தென்காசி இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 

அதே போல், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ஒட்டஞ்சத்திரம் நகரங்களை இணைக்கும் வகையில், பழனி-திண்டுக்கல் மார்க்கத்தில் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளார் ஸ்டிரைக் சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அத்துடன், முக்கிய நகரங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களும் திறக்கப்பட்டன. 8 பறக்கும் படை டிக்கெட் பரிசோதனைக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. 

தற்போது பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே தென்னக ரயில்வே சார்பாக மதுரை கோட்டம் வழியாக 30 சிறப்பு ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை-செங்கோட்டை மற்றும் திண்டுக்கல்-பழனி இடையே 13-ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மதுரையில் காலை 8.45 மணிக்குப் புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில், மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மதுரை வந்து சேரும். 

பழனி-திண்டுக்கல் சிறப்பு ரயில் பழனியில் 11.30 மணிக்குப் புறப்பட்டு 12.45 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து 2 மணிக்குப் புறப்பட்டு 3.15 மணிக்கு பழனி சென்று சேரும். இது தவிர, மதுரை-செங்கோட்டை இடையே காலை 7.15 மணிக்கும் பகல் 11.15 மணிக்கும் செல்லும் பயணிகள் ரயிலில் கூடுதலாக 1, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டி இணைக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மூலக்கதை