தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியாவில் நீதிபரிபாலனத்தின் தலைமை பீடமாக டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு விளங்குகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்து வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் முதன்முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகள் நேற்று திடீரென்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருப்பதும், நீதிபதிகள் இடையே முதன் முதலாக மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் நால்வர் நிருபர்களை சந்திக்க விரும்புவதாகவும், இந்த சந்திப்பு துக்ளக் சாலையில் உள்ள நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் இல்லத்தில் நடைபெற இருப்பதாகவும் நேற்று காலை அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஜே.செல்லமேஸ்வரின் இல்லத்தில் ஏராளமான நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் திரண்டனர். அங்கு மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

சந்திப்பு தொடங்கியதும் நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், இந்த நாட்டின் தலைமை கோர்ட்டின் நிர்வாகம் திருப்தி தரும் வகையில் அமையவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் எப்போதுமே நிகழாத ஒரு செயல் இது என்றும், கோர்ட்டு நிர்வாகத்தின் வழிமுறைகளை மாற்றிக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை தலைமை நீதிபதி (தீபக் மிஸ்ரா) ஏற்றுக்கொள்ளாததால் தாங்கள் நால்வரும் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை (நிருபர்கள் சந்திப்பு) எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது மூத்த நீதிபதிகள் நால்வரும், தாங்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய 7 பக்கங்கள் அடங்கிய கடிதத்தின் நகலை நிருபர்களிடம் வழங்கினார்கள்.

அந்த கடிதத்தில், நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட உரிமை என்றபோதிலும், இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் கள் குற்றம்சாட்டி இருக்கிறார் கள். வழக்குகளை ஒதுக்கும் உரிமை இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்ல என்றும், மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்கள் அல்ல என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கும் நீதிபதிகளில் ஜே.செல்லமேஸ்வர் ஆந்திராவையும், ரஞ்சன் கோகாய் அசாம் மாநிலத்தையும், மதன் பி.லோகுர் டெல்லியையும், குரியன் ஜோசப் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மூலக்கதை