``மாட்டுப் பொங்கலுக்கு விடுமுறை இல்லை": சர்ச்சையைக் கிளப்பும் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள்

விகடன்  விகடன்
``மாட்டுப் பொங்கலுக்கு விடுமுறை இல்லை: சர்ச்சையைக் கிளப்பும் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள்

தமிழகத்தில், மாட்டுப்பொங்கல் பண்டிகையான திங்கள்கிழமை 15-ம் தேதியன்று, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 17-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை சௌரிபாளையம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம், வருகின்ற திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் தினத்துக்கு விடுமுறை இல்லை என்று தெரிவித்துள்ளது.

அதேபோல, கோவை சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கும் திங்கள்கிழமை விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, "இன்று மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக, தங்களின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து, எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை" என்று, கோவை சௌரிபாளையம் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சாவித்ரி ராஜன் தெரிவித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் இந்த செயல், பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினத்தில் விடுமுறை அளிக்காத, கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில், விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. பின்னர், எதிர்ப்புகள் கிளம்பவே விடுமுறை அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை