கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்! மீனவர்கள் கோரிக்கை

விகடன்  விகடன்
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் செல்ல அனுமதிக்க வேண்டும்! மீனவர்கள் கோரிக்கை

கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகில்  செல்ல  அனுமதிக்க வேண்டும் என பாரம்பரிய மீனவர் சங்க நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.சின்னத்தம்பி, நாம் தமிழர் கட்சியின் மீனவர் அணி மாநில செயலாளர் டோம்னிக்ரவி ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், ’’கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் இத்திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளில் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் சென்று திரும்பி வந்துள்ளோம். இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கும் நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க ஆவலுடன் இருந்து வருகிறோம்.கடந்த ஆண்டு இலங்கை  கடற்படை சுட்டு பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்து விட்டதால், செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீனவர் உரிமையை நிலைநாட்டும் விதமாக கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதியளிக்க வேண்டும்.

விசைப்படகில் கச்சத்தீவு திருவிழாவிற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களிடம் வணிக ரீதியாக பணம் வசூல் செய்யப்படுகிறது. வணிகரீதியான உள் நோக்கத்திற்காக மட்டுமே நாட்டுப்படகு மீனவர்கள் செல்ல அனுமதியளிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கச்சத்தீவு திருவிழா செல்ல அனுமதி அளித்திருந்தும், மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு காரணமாகவே செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு ஒரு நாட்டுப்படகுக்கு 17 பேர் வீதம் 10 நாட்டுப்படகுகளில் 170 பேர் செல்ல அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை