ரூ.6,522 கோடி துணை பட்ஜெட்; தாக்கல் செய்தார் பன்னீர்

தினமலர்  தினமலர்
ரூ.6,522 கோடி துணை பட்ஜெட்; தாக்கல் செய்தார் பன்னீர்

சென்னை : பல்வேறு துறைகளுக்கு, 6,522 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, 2017 - 18ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதி நிலை அறிக்கையை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.


விபத்து இழப்பீடு:

அப்போது, அவர் பேசியதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஓய்வுபெற்றோரின் பணப் பலன்கள், பணியில் உள்ளோர் தொடர்பான நிலுவைகள், வாகன விபத்து இழப்பீடு ஆகியவற்றை வழங்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு முன்பணமாக, 2,519.25 கோடி ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 8,272 குடியிருப்புகளையும், 1.57 லட்சம் தனி வீடுகளையும் கட்டுவதற்காக, 588.12 கோடி ரூபாயை, அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது. இத்துணை மதிப்பீடுகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கீழ், 307.46 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், 'பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜா' திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, 268.07 கோடி ரூபாய், கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது. பாக்., வளைகுடாப் பகுதியில், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, சாதாரணப் படகுகளை, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த, அரசு, 286 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.

தேசிய வேளாண் காப்புறுதி திட்டத்தில், இழப்பீட்டுத் தொகை வழங்க, மாநில அரசின் பங்கான, 177.86 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மேலும், 2017 - 18ம் ஆண்டில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில், வறட்சி நிவாரண நடவடிக்கையாக, குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ள, 120 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

மேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு, மாற்றம் செய்வதற்கு, 1,799.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இவற்றுக்கென, இத்துணை மதிப்பீடுகளில்,இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு என்பதன் கீழ், 1,919.75 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தில் இருந்து, 608 கோடி ரூபாய் செலவில், 1,435.96 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த, அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. சென்னை, கோவை, சேலம் மாநகராட்சிகளுக்கு, வட்டியில்லா முன்பணமாக, 793.81 கோடி ரூபாயை, அரசு அனுமதித்துள்ளது.

நிர்வாக அனுமதி:

மாநில நெடுஞ்சாலை, முக்கிய மாவட்ட சாலைகளில், குறித்த கால பராமரிப்பு செலவினங்களுக்காக, அரசு கூடுதலாக, 300 கோடிரூபாயை அனுமதித்துள்ளது.புறவழிச்சாலை, வட்டச்சாலை, ஆறு வழிப்பாதைகள் அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, அரசு, 594.58 கோடி ரூபாய்க்கு, நிர்வாக அனுமதி அளித்துள்ளது.

அரியலுார் சிமென்ட் ஆலை விரிவாக்க திட்டத்தை நடைமுறைப்படுத்த, 'டான்செம்' நிறுவனத்திற்கு, முன்பணமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.

சம்பள உயர்வை ஏற்க திமுக மறுப்பு:

சட்டசபையில் நேற்று, எம்.எல்.ஏ.,க்களின் சம்பள உயர்வுக்கான மசோதா மீது நடந்த விவாதம் நடந்தது. அப்போது, ''தமிழகம், கடும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 100 சதவீதம் ஊதிய உயர்வு தேவையற்றது; அதை ஏற்கப் போவதில்லை,'' என, சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.

நிவாரண நிதிக்கு...:

துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசும்போது, 'முன்பு ஒரு முறை, நிதி நெருக்கடி இருந்த சமயத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஊதிய உயர்வை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார். அதேபோல், நீங்களும் வழங்க வேண்டும்' என்றார். அதற்கு, ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து, 'ஊதிய உயர்வுத் தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க தயார்' என்றார்.

மூலக்கதை