மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை

சென்னை : ''ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்திய வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ''இல்லாவிட்டால், அவர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, மயிலாப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.


அவதுாறு :

தமிழ் நாளிதழ் நடத்திய கூட்டத்தில் பேசிய, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, உலக அளவில், இந்துக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. தமிழக பிராமணர் சங்கம், ஆண்டாள் பக்தர்கள் சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் பேசியதாவது: இந்துக்களின் தெய்வத் தாயாக, ஆண்டாளை பார்க்கிறோம். திருப்பாவை கொடுத்த ஆண்டாளை, ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதத்திலும், போற்றி வருகிறோம். வைரமுத்து, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இது, இந்துகளின் மனதை, பெரிய அளவில் புண்படுத்தியுள்ளது. அவர், வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது; ஆண்டாள் சன்னதிக்கு சென்று, மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவருக்கு, ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள், பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும். அதுவரை, தமிழகம் முழுவதும், ஆங்காங்கே, தொடர்ந்து அமைதியான வழியில், இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க, மாநில மகளிர் அமைப்பு செயலர் லலிதா சுப்பிரமணியன்; உபன்யாசகர்களான தாமல் ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபாச்சாரியார், வேங்கட கிருஷ்ணன், வி.எஸ்.பி., தலைவர் வேதாந்தன், சிவாச்சாரியார் சங்க தலைவர் முத்துக்குமார குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியதாவது: தமிழர் என்ற போர்வை யில், இந்துக்களுக்கு எதிராக, சிலர் செயல்படுவதையும், பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுஉள்ளனர்.

நசுக்குகின்றனர் :

சிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால், முன்னிற்கும் பலர், பெரும்பான்மையினரை நசுக்கி வருகின்றனர். இந்தியாவில், இந்துக்களின் பலம் குறைந்து வருகிறது. தமிழக அரசின் சின்னமே, ஆண்டாள் குடி கொண்டிருக்கும், கோவில் கோபுரம் தான். அதற்கே, தற்போது, அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், வேடிக்கை பார்க்கிறது. இந்த போராட்டம், இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த போராட்டம், மதம், மொழி, வர்ணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது.

வைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும். நாளை, இந்தியாவில் மட்டு மல்லாமல், இந்துக்கள் வசிக்கும் உலக நாடுகளிலும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டாள் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, மேற்கு மாம்பலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் கண்டன பேரணி :

திருச்சி, ஸ்ரீரங்கத்தில், நேற்று பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில், வைரமுத்துவை கண்டித்து, கண்டன பேரணி நடந்தது. அம்மா மண்டபத்தில் துவங்கிய பேரணி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில், நான்கு ராஜ வீதிகளிலும் நடந்தது. உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர். இதில், ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத் குமார ராமானுஜ ஜீயர் தலைமையில் நடந்த கண்டன பேரணியில், ஸ்ரீரங்கத்தில் உள்ள மடங்களின் ஜீயர்களும், பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஸ்ரீரங்கம் பகுதி பெண்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர், கையில் ஆண்டாள் படத்துடன் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சாரங்கபாணி கோவில் ராஜகோபுர வாசலிலிருந்து, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பாவை பாடியவாறு, காந்தி பூங்காவுக்கு ஊர்வலமாக சென்றனர். வைரமுத்துவை கண்டித்து, கோஷங்கள் எழுப்பி, ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை பாடி, அதன் பொருளையும் விளக்கிப் பேசினர். இந்த நுாதன போராட்டத்துக்கு, பகவத் கைங்கர்ய சபா தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

மூலக்கதை