காய்கறிகளுக்கும் எம்.ஆர்.பி., : விவசாய அமைப்பு எதிர்பார்ப்பு

தினமலர்  தினமலர்
காய்கறிகளுக்கும் எம்.ஆர்.பி., : விவசாய அமைப்பு எதிர்பார்ப்பு

புதுடில்லி : விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கும், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்ப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், பாரதிய கிசான் சங்கத் தலைவர், மோகினி மோகன் மிஸ்ரா கூறியதாவது: தான் உற்பத்தி செய்யும் தக்காளியை, விவசாயிகள், ஒரு கிலோ, ஐந்து ரூபாய் என்ற விலையில், கொள்முதல் சந்தைகளில் விற்கின்றனர். அங்கு அது, ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு கடைகளில் கிடைக்கும் போது, இது, 50 ரூபாயாக உயர்கிறது.

விவசாயி, தனக்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும், எம்.ஆர்.பி., விலைக்கே வாங்குகிறார். ஆனால், அவர் உற்பத்தி செய்யும் பொருளை, குறைந்தபட்ச விலைக்கே விற்கும் அவலநிலை உள்ளது.

விவசாய பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதால் மட்டும், இதற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட, விவசாயிகளுக்கு தருவதற்கு வியாபாரிகள் முன்வருவதில்லை.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில், உள்ளீட்டு பொருட்களுக்கான வரியை குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால், விவசாயிக்கு அந்த வாய்ப்பும் இல்லை.

விவசாயிகளின் வருமானத்தை, 2022க்குள் இரட்டிப்பாக்க, அரசு நினைக்கிறது. அதன் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால், விவசாயிகளுக்கு பலன் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில், காய்கறிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதுடன், எம்.ஆர்.பி., விலையையும் நிர்ணயிக்க வேண்டும். அதிக விலைக்கு விற்பது தடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு உள்ளீட்டு வரி சலுகை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பு, இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை