100வது பயணம் வெற்றி: 'இஸ்ரோ' புதிய சாதனை

தினமலர்  தினமலர்
100வது பயணம் வெற்றி: இஸ்ரோ புதிய சாதனை

ஸ்ரீஹரிகோட்டா : 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய, 100வது செயற்கைக்கோள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து திட்டமிடலுக்கு உதவும், 'கார்டோசாட் - 2' உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்களுடன், பல்வேறு நாடுகளின், 28 செயற்கைக்கோள்களும், இந்த பயணத்தின் போது செலுத்தப்பட்டன.

இஸ்ரோ, 1975ல், முதல் செயற்கைக்கோளை செலுத்தியது. அந்த வரிசையில், 100வது செயற்கைக்கோளை நேற்று செலுத்தி சாதனை படைத்துள்ளது. பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் மூலம், கார்டோசாட் - 2 உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்கள், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 28 செயற்கைக்கோள்கள் என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

கடந்த, 2017 ஆகஸ்டில், பி.எஸ்.எல்.வி., - சி 39 ராக்கெட், தொழில்நுட்பக் காரணங்களால் பயணத்தை துவங்குவதற்கு முன், தோல்வியில் முடிந்தது. அதனால், நேற்றைய செயற்கைக்கோள்கள் ஏவுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், விரைவில் ஓய்வு பெற உள்ள, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தலைமையில் நடக்க உள்ள, கடைசி செயற்கைக்கோள் ஏவுதல் இதுவாகும்.

ஆந்திராவின், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள, இஸ்ரோவின் விண்வெளி மைய தளத்தில் இருந்து, நேற்று காலை, 9:28 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - சி 40 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி, 17 நிமிடத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில், கார்டோசாட் - 2 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மற்ற செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிறுத்தப்பட்டன.

கார்டோசாட் வகை செயற்கைக்கோள்களில், இது, ஏழாவது செயற்கைக்கோளாகும். இதில், பூமியின் குறிப்பிட்ட பகுதியை படம் பிடித்து அனுப்பும் கேமராக்கள் உள்ளன. இது, நகர மற்றும் கிராமப்புற மேம்பாடு, போக்கு வரத்து மேம்பாடு, ரயில், சாலை போக்குவரத்து திட்டமிடல், கடலோர நிலப்பகுதியை முழுமையாக பயன்படுத்த திட்டமிடல் போன்றவற்றுக்கு உதவுகிறது.

''இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது, நாட்டு மக்களுக்கு அளிக்கும் புத்தாண்டு பரிசு,'' என, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில், 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை