சிறுமி பலாத்கார கொலை: பாகிஸ்தானில் கலவரம்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறுமி பலாத்கார கொலை: பாகிஸ்தானில் கலவரம்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் இருந்து 20 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது கசூர் நகரம். அந்த நகரத்தை சேர்ந்த ஜைனப் என்ற 7 வயது சிறுமி, கடந்த 4-ந் தேதி பள்ளிக்கூடத்துக்கு சென்றாள்.

பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவளது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜைனப்பை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்குள்ள வயல்வெளியில் சிறுமியின் உடல் கிடந்தது.

அவள் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது போலீஸ் புலனாய்வில் தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கற்பழிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

இந்த சம்பவம் அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்தையும், துணை கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட சென்றனர். அவர்களின் போராட்டத்தில் கலவரம் மூண்டது.

போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். துணை கமிஷனர் அலுவலகத்தை சூறையாட முயன்றனர்.

அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 2 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர்.

2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரில் ஒருவர் லாகூர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார்.

இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

.

மூலக்கதை