உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

புதுடெல்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷன் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது என அந்நாடு விளக்கமளித்துள்ளது. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை, உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு ஈரான் அருகே பாகிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்தது.

அவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், துாக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்  சிறையில் உள்ள ஜாதவை அவருடைய மனைவி மற்றும் தாய் நேரில் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. வரும், 25ம் தேதி நடக்க உள்ள இந்த சந்திப்புக்காக அவர்களுக்கு, பாகிஸ்தான்அரசு விசா வழங்கியது.

இந்த சந்திப்புதான் அவர்களின் கடைசி சந்திப்பு என்றும் அதன்பின் ஜாதவ் மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது: மனிதநேயம் மற்றும் இஸ்லாமிய நெறி அடிப்படையில் மட்டுமே ஜாதவுடன் அவரது குடும்பத்தினர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

25ம் தேதி நடக்கவுள்ள இச்சந்திப்பின் போது இந்திய தூதரும் அனுமதிக்கப்படுவார். குல்பூஷண் ஜாதவின் கருணை மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

அவருக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது. ஜாதவின் மனைவி மற்றும் தாய் செய்தியாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை