பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை

இஸ்லாமாபாத்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 291 மீனவர்களை அடுத்த வாரம் விடுதலை செய்ய இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது: மனிதநேய அடிப்படையில் 291 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 8 ஆகிய இரு தேதிகளில் இரு பிரிவாக வாகா எல்லை வழியாக அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மனிதநேயப் பிரச்னைகளை அரசியல் ஆக்கக்கூடாது என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

இவ்வாறு பைசல் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் இதே போல் 68 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. அரபிக் கடலில் இந்தியா பாகிஸ்தான் எல்லைகள் முழுமையாக வரையறை செய்யப்படவில்லை.

தொழில்நுட்ப வசதிகள் இல்லாத படகுகளில் மீனவர்கள் செல்வதால் காற்றின் வேகத்தின் படகுகள் எல்லை தாண்டி சென்று விடுகின்றன. இதனால் எல்லை தாண்டியதாக இரு நாட்டு மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையாலும், இந்திய கடற்படையாலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 400 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை