மாத்தியோசி!காய்கறி கழிவை கால்நடைக்கு கொடுக்கலாம்:தொலைநோக்கு பார்வை இருந்தால் தீர்வுண்டு

தினமலர்  தினமலர்
மாத்தியோசி!காய்கறி கழிவை கால்நடைக்கு கொடுக்கலாம்:தொலைநோக்கு பார்வை இருந்தால் தீர்வுண்டு

பொங்கலூர் :மார்க்கெட் உட்பட பல இடங்களில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக்குவதன் மூலம், குப்பை பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம், என, விவசாயிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில், நாள்தோறும், 550 டன் குப்பை சேகரமாகிறது. இதுவரை குப்பை கொட்டி வந்த பாறைக்குழியும் நிரம்பி விட்டது. அதில், இடமில்லாததால், நகரெங்கும் குப்பை மலைபோல் குவிந்தது. தற்காலிக ஏற்பாடுகளை, மாநகராட்சியினர் தாமதமாக செய்து, நான்கு மண் டலங்களில் இடம் பிடித்து கொட்டி வருகின்றனர்.
இதனால், குப்பை பிரச்னை சிறிது குறைந்துள்ளது. ஒரு வாரமாக தேங்கிய குப்பையிலிருந்து வீசும், துர்நாற்றம் பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. சுகாதார சீர்கேட் டால், தொற்று நோய் பரவும் அபாயமும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஒரே தீர்வாக, குப்பையை எங்காவது தள்ளி விட்டால் போதும் என்பதே, அதிகாரிகளின் எண்ணமாக இருக்கிறது.
குப்பை கொட்ட இடம் இல்லாதபோது மட்டுமே மக்களிடம் இருந்து நெருக்கடி முற்றுகிறது. இடம் கிடைத்து விட்டால், அது நிரம்பும் வரை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இதை விவசாயிகளுடன் கைகோர்த்தால் எளிதாக சமாளிக்கலாம், என விவசாயிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன், நகரில் சேகரமாகும் கழிவுகளை விவசாயிகள் காசு கொடுத்து, வாங்கி சென்று, உரமாக பயன்படுத்தி வந்தனர். பாலிதீன் மற்றும் கண்ணாடி பொருட் களின் உபயோகம் அதிகரித்த பின், விவசாயிகள் குப்பை வாங்குவதை கைவிட்டனர். இது குப்பை தேங்க முக்கிய காரணங்களில் ஒன்று.
குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நிலையில் யாரும் இல்லை. துர்நாற்றம் வீசுவதற்கு முக்கிய காரணமே விரைவில் அழுகும் தன்மை கொண்ட மார்க்கெட் கழிவுகளே. இவற்றை உடனுக்குடன் சேகரித்து, சிறந்த கால்நடை தீவனமாக மாற்ற முடியும். இதற்காக விவசாயிகள், விவ சாய சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
இது குறித்து, பொங்கலூர் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:காய்கறி கழிவுகளை சேகரிக்க வசதியாக, வாகனம், தொழிலாளர் சம்பளம் மற்றும் மெஷின்கள் வாங்க நிதியுதவியை, மாநில அரசு செய்ய வேண்டும். அந்த கழிவுகள், கால்நடைகளுக்கு பயன்படுத்தியது போக, மீதமானதை, விவசாயிகள் உரமாக மாற்றி விடுவர். இதனால், விவசாயிகள் உரம் வாங்கும் செலவும் குறையும்.
இதுபோல் செய்தால், இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்து, நஞ்சில்லா காய்கறிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். எவ்விதமான பக்க விளைவும் ஏற்படாது. குப்பையை மறு சுழற்சி செய்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஊக்கத்தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்தினால், இத்திட் டம் அபார வெற்றி பெறும் என்பது சாத்தியமே.
குறிப்பாக, பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை முற்றிலும் ஓழிக்க, மாநகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சி செய்தால், அந்த குப்பையும் குவியாது. திருப்பூர் மாநகரமும் "பளிச்' என்று மாறிவிடும். மாநகராட்சி மாற்றி யோசிக்குமா? குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை