தனிமையில் தவிக்கும் முதியோரிடம் 'அய்யா...எப்படி இருக்கீங்க?'அன்புடன் விசாரிக்கும் திட்டம் துவக்கம்!

தினமலர்  தினமலர்
தனிமையில் தவிக்கும் முதியோரிடம் அய்யா...எப்படி இருக்கீங்க?அன்புடன் விசாரிக்கும் திட்டம் துவக்கம்!

கோவை:எவ்வளவு பணம் இருந்தாலும், எவ்வளவு பெரிய பங்களா இருந்தாலும், வயதான காலத்தில் அன்பாக நாலு வார்த்தை பேசவும், அரவணைக்கவும் உடன் ஆளில்லை என்பது, எவ்வளவு பெரிய கொடுமை. ஒரு காலத்தில் பெரிய குடும்பமாக சிறப்பாக வாழ்ந்தவர்கள், உடலின் கடைசி துடிப்பு அடங்கும்போது, உடன் எவரும் இல்லாமல் மடிவது, கொடுமையிலும் கொடுமை.
உயரமான அபார்ட்மென்ட்டுகளின் நான்கு சுவர்களுக்குள், நாக்கு செத்துப்போய் கிடக்கும் முதியோரிடம், மகனாக, பேரனாக, தினமும் நாலு வார்த்தை பேசும், நல்லதொரு திட்டத்தை இதோ துவங்கியுள்ளது நம் மாநகர போலீஸ்!கோவை மாநகர பகுதியில் ரோட்டில் நடந்து செல்லும் மூதாட்டிகள், வீட்டில் தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகின்றன. போலீஸ் போன்றும், முகவரி கேட்பது போன்றும் இன்னும் பல வழிகளிலும், முதியோர்களிடம் திருடர்கள் 'கைவரிசை' காட்டுகின்றனர்.
இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், மாநகரில் தனியாக வசித்து வரும் முதியோர்கள் குறித்த தகவல்களை திரட்ட, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் 'பீட்' போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, போலீசார் தனியாக வசித்து வரும் முதியோர் குறித்த தகவல்களை சேகரித்தனர்.இதன்படி மாநகரில், 700 முதியோர் தனியாக வசித்து வருவது தெரிந்தது. இவர்களது மகன், மகள் அல்லது உறவினர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாவட்டங்களிலும் தங்கி பணியாற்றி வருகின்றனர். துளியும் பாதுகாப்பில்லாமல், வசிக்கும் 700 முதியோர் உள்ளதை அறிந்த மாநகர போலீஸ், அதிர்ச்சி அடைந்தது.
இதுபோன்ற முதியோரை பாதுகாக்கும் வகையில், 'ஹலோ' எனும் திட்டத்தை, மாநகர போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இத்திட்டத்தின்படி, 'பீட்' போலீசார் தங்கள் பகுதிகளில் உள்ள முதியோரிடம், தினமும் ஒருமுறை போனில் பேச வேண்டும். இதன்மூலம் மாநகரில் தனியாக வசித்து வரும் முதியோரை, குற்ற சம்பவங்களில் இருந்து முழுமையாக காக்க முடியும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் லட்சுமி கூறியதாவது:மாநகர பகுதி முழுவதும் கண்காணிக்கும் வகையில் மொத்தம், 44 போலீஸ் 'பீட்'டுகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு 'பீட்'டிலும் மூன்று போலீசார் உள்ளனர்.
இந்த 'பீட்' போலீசார், தங்கள் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், தனியாக வசித்து வரும் முதியோர்களை தினமும் சந்தித்து பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகர பகுதியில், வசிக்கும் முதியோரின் மொபைல்போன் எண்கள், அந்தந்த 'பீட்' போலீசாரிடம் உள்ளது. இந்த மொபைல்போன் எண்களுக்கு, தினமும் ஒரு முறையாவது 'பீட்' போலீசார் அழைத்து பேசுவார்கள்.
இதனால், தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு ஏதேனும் பிரச்னை, மருத்துவ வசதிகள் தேவைப்பட்டால், உடனடியாக உதவ முடியும். முதியோரும், தங்களுக்கு உதவி தேவைப்படும்போது, 'பீட்' போலீசாரின் மொபைல்போன் எண்களுக்கு, தாராளமாக அழைத்து கேட்கலாம். தனியாக வசித்து வரும் முதியோரை, தங்களது பெற்றோர் போல் கருதி, கண்காணிக்க 'பீட்' போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
இட்லி கடையும் இறுதி சடங்கும்!
முதியோரை பாதுகாக்க, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, தங்களுக்கு சிறிய இட்லி கடை வைத்து கொடுக்க உதவுமாறு, போலீசாரை ஒரு வயதான தம்பதியர் அணுகினர். இதையடுத்து, சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், ஒரு தம்பதிக்கு இட்லி கடை வைத்து கொடுக்க, போலீசார் ஏற்பாடு செய்தனர்.இதே போன்று, தனியாக வசித்து வந்த முதியவர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். போலீசாரின் ஹலோ திட்டம் மூலம், முதியவர் உயிரிழந்தது பீட் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்து, இறுதிச்சடங்கு நடக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

மூலக்கதை