அரசியல் நன்றாக இல்லை :நெப்போலியன்

தினமலர்  தினமலர்
அரசியல் நன்றாக இல்லை :நெப்போலியன்

1991 ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். தொடர்ந்து நாடோடி தென்றல், தலைவாசல், கேப்டன் மகள், சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே, எஜமான், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், 2001 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார்.


அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர், "டெவில்ஸ் நைட்" என்ற ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். தினமலர் இணையதள வாசகர்களுக்காக அவர் அளித்த பேட்டி...

* ஏன் இந்த கெட்அப்?

கோட் சூட் கொடுத்தா போட்டுக் கொள்ள நன்றாக தான் இருக்கு. ஆனால் நமக்கு எல்லா டைரக்டர்களும் கிராமத்து கேரக்டரே கொடுக்கிறார்கள்.வந்ததும் கதை சொல்வார்கள். கொடுபோட்ட அன்டிராயர், 4 முளம் வேஷ்டி, கையில் அரிவாள் என்று தான் சொல்வார்கள். இது ஹாலிவுட் படம் என்பதால் எந்த மாதிரி கேரக்டர் என யோசனையாக இருந்தேன். படம் முழுவதும் நீங்கள் சூட்டில் தான் இருக்கனும் என டைரக்டர் சொன்னார். மியூசியம் பொறுப்பாளர் கேரக்டர். படத்தில் திருப்புமுனையான அமையும் கேரக்டர் என்பதில் அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் கேட்டார். டைரக்டரிடம் பேசுங்கள் என்றேன். டைக்டர் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார். எனது ரசிகர்களுக்கு இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

* நீங்க நடிக்கும் ஆங்கிலப் படம் பற்றி சொல்லுங்க?

"டெவில்ஸ் நைட்" என்பது அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க சுதந்திரந்திரம் அடைந்வதற்கு முன் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அதே நாளும், அதற்கு அடுத்த நாளும் அது போன்ற சம்பவம் நடந்து விடுமோ என்ற பயத்தில் மக்கள் இருந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

* இது எங்கு நடக்கும் சம்பவம்?

இது அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் டெட்ராயில் நடக்கும் சம்பவம். 300 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை அமைத்துள்ளனர். எனக்கு முழு கதை தெரியாது. என்னுடன் கதாபாத்திரம் வரும் பகுதியை பற்றி மட்டும் தெரியும்.

* எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?

படத்தின் தயாரிப்பாளர் திருச்சியை சேர்ந்தவர். அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் செட்டில் ஆகிவிட்ட அவர் எனக்கு நீண்ட நாளைய நண்பர். ஒரு படம் எடுக்கிறேன் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். ஹாலிவுட் படத்தில் நான் எப்படி நடிப்பது, எனக்கு ஆங்கிலமும் சரளமாக பேச வராது என்றேன். நான் கற்றுக் தருகிறேன் எனக் கூறி அவர் தான் நடிக்க வைத்தார்.

* என்ன கதாபாத்திரம் உங்களுக்கு?

மியூசிய பொருப்பாளர் கேரக்டர். இது இதுவரை நான் பண்ணாத கேரக்டர். 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான மியூசியம். உண்மையான மியூசியத்திற்கே சென்று படம் எடுக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷன் என்றால் நம்ம ஊர் போல் செட் அமைப்பதில்லை. உண்மையான போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று எடுக்கிறார்கள். அதில் நிஜ போலீசும் நடிக்கிறார். இது மிக ஆச்சரியமாக இருந்தது.

* இந்த கதாபாத்திரத்திற்கு நீங்க எடுத்துக் கொண்ட பயிற்சி?

பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் 2 நாட்கள் நாங்கள் எந்த மாதிரி படம் எடுக்கிறேன் என பாருங்கள். அதில் ஏதும் திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்கள். நானும் உங்களின் செயல்பாடுகளை பார்க்கிறேன். அதன் பிறகு உங்கள் கேரக்டரை முடிவு செய்கிறேன் என டைரக்டர் சொன்னார். அது படியே நானும் செய்தேன். பிறகு கேரக்டருக்கு ஏற்ற மாதிரி என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். அதையே நானும் செய்தேன்.

* நீங்க மட்டும் தான் தமிழரா படத்தில்?

பாடகர் ஒருவரும் தமிழர் என சொன்னார்கள். மற்ற அனைவரும் அமெரிக்கர்கள் தான்.

* இந்த படத்தில் கிடைத்த புது அனுபவம்?

இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். அதில் எல்லாம் நடத்து முடித்து விட்டு, பிறகு சென்று டப்பிங் பேச வேண்டும். இதில் அப்படி இல்லை. நேரடியாக பதிவு செய்கிறார்கள். நமது சொந்த குரலிலேயே அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் வேலை சீக்கிரமாக முடிகிறது. இருந்தாலும் மிக நுணுக்கமாக பார்க்கிறார்கள்.

* கடினமாக இருந்தவைகள்?

அதெல்லாம் ஏதும் இல்லை. அனைவரும் மிக எளிமையாக உள்ளனர். நமது சொந்த குரலில் பேசி, நடிக்க வேண்டும் என்பதும், அதுவும் நேரடியாக பதிவு செய்யப்பட்டதும் கொஞ்சம் கடினமாக இருந்தது.

* படத்தில் பாடல்கள்? சண்டைக் காட்சிகள்?

அதெல்லாம் கிடையாது. ஹாலிவுட் படங்களில் பாடல்கள் இருக்காது. மற்றபடி ஆக்ஷன், சேசிங், திரில்லராக இருக்கும்.

* உங்கள் சாதனைகள் எது என்று நினைக்கிறிங்க?

நான் திறந்து புத்தகம் போல். என்னை பற்றி மக்களுக்கு அனைத்தும் தெரியும். நான் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் 120 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பிசினஸ் வைத்துள்ளேன். ஐடி நிறுவனம் வைத்துள்ளேன். இது எல்லாமே என்னை பொருத்தவரை ஒரு சாதனை தான். சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

* சினிமா துறையில் இருந்து விலகி இருந்திங்களே?

நான் விலகிப் போகவில்லை. மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் நடிக்கக் கூடாது என ஒரு விதி உள்ளது. அதனால் 6 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தேன். இப்போது அரசியலுக்கு பிரேட் எடுத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்துள்ளேன்.


* இப்ப சினிமா எப்படி இருக்கு?

இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. நான் நடிக்கும் போது எல்லாம் பிலிமில் பண்ணினோம். இப்போது டிஜிட்டல் ஆகி விட்டது. அதனால் எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்து உடனடியாக அதனை சரி செய்து கொள்கிறார்கள். நான் சினிமாவிற்கு வந்த காலத்தில் டப்பிங் பேசும் போது தான் நாங்கள் நடித்ததை நாங்கள் பார்க்க முடியும். இப்போது ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் மானிட்டரில் பார்த்து, தவறை சரி செய்து கொள்கிறார்கள். டெக்னாலஜி வளர்ந்திருப்பது நன்றாக உள்ளது.

* நீங்க விரும்பி நடித்த கதாபாத்திரம்?

காலத்திற்கும் அழியாத பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தது சீவலப்பேரி பாண்டி. அதுவும் நான் கதாநாயகனாக நடித்த முதல் படம். எனது 27 வது படமாக இருந்தாலும், நான் கதாநாயகனாக உருவெடுத்த படம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகவும், திருப்புமுனை படமாகவும் அமைந்தது.

* நெப்போலியன் அடையாளமாக நினைப்பது?

கிராமத்து கதாபாத்திரம் என்றாலே நெப்போலியனை கூப்பிட வேண்டும் என்று போட்டார்கள். அது ஒரு பெரிய வளர்ச்சி, வாய்ப்பு எனக்கு. இப்பவும் நான் வேட்டியை மடித்துக் கட்டி, கையில் அரிவாள் எடுத்தால் உங்களை போன்று பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். நம்ம தான் முதுகில் இருந்து அரிவாள் எப்படி எடுப்பதை என்பதை மக்களுக்கு சொல்லி கொடுத்தது.

* கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவை?

அவர் மக்களுக்கு பணியாற்றி விதம் எனக்கு பிடித்தது. நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து கற்றுள்ளேன். குறிப்பாக தமிழ் ஆர்வம், ஞாபகசக்தி அவரை போல் யாரும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது. நகைச்சுவை உணர்வு. எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நகைச்சுவையாக பதில் சொல்லக் கூடியவர். அது எல்லாம் கடைபிடிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் அவரிடம் நான் கற்றுக் கொண்டதில் இது எல்லாம் பிடித்தது.

* உங்க மனசை பாதித்த படம்?

எனது முதல் படமே மறக்க முடியாத படம் தான். 27 வயதில் 60 வயது கிழவனாக நடித்து, பின் வில்லனாகி, பிறகு ஆன்டி ஹீரோ, ஹீரோ ஆனேன். அதனால் முதல் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.

* இப்ப அரசியல் எப்படி இருக்கு?

இப்ப அரசியல் சரியாக இல்லை. வருத்தமாக இருக்கிறது. இந்த சமயத்தில் களத்தில் இறங்கி களப்பணி ஆற்றனும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, அமெரிக்காவில் குடியிருப்பதால் நேரடியாக இப்போது அரசியல் களத்தில் இறங்க வேண்டாம் என ஒதுங்கி உள்ளேன். 10 நாட்களுக்கு ஒரு முறையோ, 2 மாதத்திற்கு ஒருமுறையோ வந்து படத்தில் மட்டும் நடித்து விட்டு போகலாம் என பசங்க, மனைவி விரும்புவதால் நானும் அப்படியே உள்ளேன்.

* தமிழக சூழ்நிலைகளை கவனிப்பது உண்டா?

எல்லா விஷயமும் தாமதமாக கிடைக்கும் என்பதால் எல்லாமே கவனிக்க முடியாது. அதை பார்த்தால் மீண்டும் ஆசையை தூண்டுவதாக இருக்கும்.பிறகு ஏதாவது பேச வேண்டி இருக்கும். அரசியலுக்கு வர வேண்டி இருக்கும்.அதனால் நாங்கள் அவை எதையும் பார்ப்பதில்லை. ஏதாவது முக்கியமாக சம்பவம் என்றால் மட்டும் டிவி.,யை பார்த்து தெரிவித்து கொள்ளோம்.

* நடிகர் சங்கம் அப்போ? இப்போ?

அந்த காலத்தை யாராலும் இனி கொண்ட வர முடியாது. அந்த காலத்தில் பெரும் கடனில் மூழ்க இருந்த நடிகர் சங்கத்தை நாங்கள் பொறுப்பேற்று, நிர்வகித்து, காப்பாற்றினோம். ரஜினி, கமலை வைத்து மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தி, நிதி திரட்டி, கடனை அடைத்து, நிதியை சேர்த்து தான் வைத்து விட்டு வந்தோம். இப்போது என்ன நிலையில் இருக்கு என எனக்கு தெரியாது. கட்டிடமெல்லாம் இடித்து கிடக்கிறது. இன்னும் கட்ட ஆரம்பிக்கவில்லை. எங்களுக்கு வருத்தம் தான். சீக்கரம் கட்டுவார்கள் என நம்புவோம்.

மூலக்கதை