'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' நிர்பயாவின் தாய் ஆஷா வருத்தம்

தினமலர்  தினமலர்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நிர்பயாவின் தாய் ஆஷா வருத்தம்

புதுடில்லி, டில்லியில், 2012, டிசம்பரில், 23 வயது பிசியோதெரபி மாணவி, நிர்பயா, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவன், சிறையில் தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன், சிறார் நீதிமன்றத்தில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டான். மற்ற நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, நான்கு பேரும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஐந்தாண்டு ஆகியும், குற்றவாளிகள் உயிருடன் இருப்பது குறித்து, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நிருபர்களிடம் கூறிய தாவது: என் மகள் இறந்து, ஐந்தாண்டுகள் ஆனபின்பும், குற்றவாளிகள் உயிருடன் இருப்பது வேதனை அளிக்கிறது. உரிய நேரத்தில் நீதி கிடைக்காவிடில், சட்டத்தின் மீது, மக்களுக்கு பயம் போய் விடும்.

இந்நிலையை மாற்ற, வலிமையான சட்டம் தேவை. சாதாரண மனிதர், அரசியல்வாதி என, யாராக இருந்தாலும், அவர்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். பஸ் நிலையங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக வாக்குறுதி அளித்தனர். அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள், வெறும் வார்த்தைகளாக உள்ளன. அவற்றை, ஒருபோதும் நிறைவேற்றுவதே இல்லை.

இந்தியாவில் நிலைமை, துளிகூட மாறவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.என் கணவருக்கோ, குடும்பத்தில் பிறருக்கோ, வேலை அளிக்கும்படி நான் கேட்கவில்லை. என் மகள் சாவுக்கு நீதி கேட்கிறேன். கடந்த இரு ஆண்டுகளாக, நிர்பயா வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை