இலங்கை அணிக்கு எதிராக கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அணிக்கு எதிராக கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை!

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
 
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் இலங்கை அணி தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொகாலியில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.
 
மொகாலி போட்டியை போல இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அதிரடியாக விளையாடி தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
 
முதல் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய வீரர்கள் 2-வது ஆட்டத்தில் சரியான பதிலடி கொடுத்தனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.
 
ரோகித்சர்மா 3-வது இரட்டை சதத்தை அடித்து முத்திரை பதித்தார். தவான், புதுமுக வீரர் ஷிரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்தினர். தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
 
பந்துவீச்சில் யசுவேந்திர சகால் உள்ளிட்ட வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த போட்டியில் அறிமுகம் ஆனார். நாளைய போட்டிக்கான அணியில் ஒரு வேளை மாற்றம் இருந்தால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.
 
தொடர்ச்சியாக 8-வது ஒருநாள் தொடரை வெல்லும் வேட்கையில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ளது.
 
டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
 
கடந்த போட்டியில் சதம் அடித்த முன்னாள் கேப்டன் மேத்யூஸ், கேப்டன் திசாரா பெரைரா, உபுல் தரங்கா, டிக்வெலா, லக்மல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
 
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இரு அணிகளும் இதுவரை 157 ஆட்டத்தில் மோதியுள்ளன. இந்தியா 89-ல், இலங்கை 56-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்தது. 11 ஆட்டம் ‘டிரா’ ஆனது.
 
நாளை போட்டி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்த ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
 
இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), தவான், ஷிரேயாஸ் அய்யர், டோனி, தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சகால், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், பும்ரா, ரகானே, குல்தீப்யாதவ், அக்‌ஷர் பட்டேல், சித்தார்த் கவூல்.
 
இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), உபுல்தரங்கா, குணதிலகா, திரிமானே, மேத்யூஸ், டிக்வெலா, அகிலா தனஞ்செயா, நுவன் பிரதீப், லக்மல் குணரத்னே, பதினரா, சமர விக்ரமா, குஷால் பெரைரா, சதுரங்க டிசில்வா, தனஞ்செய டிசில்வா, சமீரா.
 

மூலக்கதை