பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பகல்/இரவு டெஸ்ட் தவிர்க்க முடியாதது: கங்குலி கருத்து

கொல்கத்தா: ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் எழுச்சிக்கு பின் பாரம்பரியம் மிக்க டெஸ்ட் கிரிக்கெட் மெல்ல அழிந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால், டிக்கெட் விற்பனையில் அதிக லாபம் ஈட்ட முடிவதில்லை.

இந்தியா-இலங்கை இடையே சமீபத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்டும் வகையில், பல்வேறு புதுமைகளை ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகுத்தி வருகிறது.

இதில், ஒன்றுதான் பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள்.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்க (சிஏபி) தலைவருமான கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘’பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள் தவிர்க்க முடியாதது. ரெட் செரி பந்துக்கு பதிலாக பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.

ரசிகர்கள் மாலையில் வந்து போட்டியை கண்டுகளிக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

வேறு ஒன்றுமில்லை’’ என்றார். இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில், தனது 3வது இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் கங்குலி.



இது குறித்து அவர் கூறுகையில், ‘’இலங்கையை நினைத்து வருத்தப்படுகிறேன்.   குறிப்பிடத்தகுந்த ஒரு இன்னிங்ஸை ரோகித் சர்மா விளையாடியுள்ளார். சதத்தை இரட்டை சதமாக மாற்ற அவர் 36 பந்துகளை மட்டுமே எடுத்து கொண்டுள்ளார்.

டி20 முறைக்கு ஏற்ப காலம் மாறி விட்டது. இதே வழியில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.


.

மூலக்கதை