முத்தலாக் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஜனவரியில் புதிய சட்டமாகிறது!

தினகரன்  தினகரன்

டெல்லி: முத்தலாக் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் விவாகரத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு இஸ்லாமிய பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முத்தலாக் கூறி உடனே விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்தான இஸ்லாமிய பெண்கள் ஜீவனாம்சம் பெற சட்ட மசோதா வகை செய்கிறது. முத்தலாக் மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரை கொண்ட மத்திய மந்திரிகள் குழு ’முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வடிவுக்கு உத்தரப்பிரதேசம் அரசு முதல் மாநிலமாக ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த மசோதா ஏற்றுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெப்பமிட்ட பின்னர் வரும் ஜனவரியில் இந்த மசோதா \'முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் புதிய சட்டமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை