கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரிக்கெட் உலகில் மீண்டும் சூதாட்ட புயல்: எனது மகன் தவறு செய்திருந்தால் கடுமையான தண்டனை கொடுங்கள்

புது டெல்லி: இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில், சூதாட்ட புரோக்கர்கள் என கூறப்படும் இந்தியாவை சேர்ந்த சோபர்ஸ் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகிய இருவரை, துபாய் மற்றும் டெல்லியில் உள்ள ஓட்டல்களில் அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளது. பத்திரிகையாளர்கள் என்பதை மறைத்து, சூதாட்டம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புவதாக தங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர்.

அப்போது சூதாட்ட புரோக்கர்கள், ‘’ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில் கூட எங்களால் ‘பிக்சிங்’ செய்ய முடியும். முன்கூட்டியே முடிவு செய்த விஷயங்களை போட்டிக்கு முன்பாக உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.

அதன் மூலம் ‘பெட்’ கட்டி பணம் சம்பாதிக்கலாம். ‘ஹெல்மெட்’ அல்லது ‘க்ளவுஸை’ கழற்றுதல் உள்ளிட்ட வழிகளில் சம்பந்தப்பட்ட வீரர்கள் சிக்னல் கொடுப்பார்கள்’’ என கூறியுள்ளனர்.



இந்த கலந்துரையாடல் வீடியோவை, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் 3வது டெஸ்ட் நேற்று காலை பெர்த் வாகா மைதானத்தில் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அந்த பத்திரிகை வெளியிட, கிரிக்கெட் உலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் சூதாட்டம் நடைபெறவில்லை என ஐசிசி, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் மறுத்துள்ளன.

இதில், சோபர்ஸ் ஜோபன் முன்னாள் இந்திய ஜூனியர் லெவல் ஸ்டேட் கிரிக்கெட் வீரராவார். டெல்லி, ஹிமாச்சல் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார்.   இந்த புகார் குறித்து சோபர்ஸ் ஜோபனின் தந்தை பல்ஜித் சிங் ஜோபன் கூறுகையில், ‘’எனது மகன் டெல்லியில் கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவார்.



ஒருவேளை அங்கே அவர் சிலரை சந்தித்திருக்கலாம். எனக்கு எப்படி தெரியும்? இந்த வழக்கை தற்போது ஐசிசி விசாரித்து வருகிறது.

கொஞ்சம் காத்திருப்போம். அவர் ஏதாவது தவறு செய்திருந்தால், கடுமையான தண்டனை கொடுங்கள்.

அவர் நன்கு வளர்ந்து விட்டார். அதனால் என்னால் அவருக்கு அறிவுரை கூற முடியாது’’ என்றார்.

62 வயதாகும் பல்ஜித் சிங், டெல்லியின் விகாஸ்புரியில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.   இந்த சம்பவம் குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. டெல்லி கிரிக்கெட் வட்டாரங்களில் விசாரித்தபோது, சோபர்ஸ் ேஜாபன் ஒரு சராசரி கிரிக்கெட் வீரர் என்றே பலரும் நினைவு கூர்ந்தனர்.



அவரது சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்ததால், சோபர்ஸ் ஜோபனின் கிரிக்கெட் வாழ்க்கையில் தடை ஏற்பட்டது. இது போலீஸ் வழக்கு, விசாரணைக்கும் வழிவகுத்தது.   இது குறித்து பல்ஜித் சிங் ஜோபன் கூறுகையில், ‘’அவர் சிறந்த வீரர்.

ஆனால் வழக்கிற்கு பிறகு அரிதாகவே விளையாடினார். கடந்த 4 ஆண்டுகளாக அவர் விளையாடவே இல்லை.

ஒரு கட்டத்தில் அவர் மிகுந்த மன அழுத்தத்தின் கீழ் இருந்தார். தற்கொலை செய்து கொள்வாரோ? என்ற அச்சமும் கூட எனக்கு இருந்தது’’ என்றார்.


.

மூலக்கதை