கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் உடல் சொந்த ஊரில் அடக்கம் அதிகாரிகள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் உடல் சொந்த ஊரில் அடக்கம் அதிகாரிகள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சங்கரன்கோவில்: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லை இன்ஸ்பெக்டர் உடல் அவரது சொந்த ஊரான சாலைப்புதூருக்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அதிகாலை 1. 10 மணிக்கு அவரது உடல் 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3. 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையில் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில்   இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது உடல் விமானம் மூலம் நேற்று மதியம் சென்னைக்கு வந்தது.

பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு கார் மூலம் நேற்று இரவு 11. 10 மணிக்கு இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான தேவர்குளம் அருகேயுள்ள சாலைப்புதூருக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ். பி.

அருண்சக்திகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெரியபாண்டியன் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பெரியபாண்டியனின் உடலை பார்த்து அவரது மனைவி பானுரேகா, மகன்கள் ரூபன், ராகுல், தாய் ராமாத்தாள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

மேலும் ஊர் மக்களும், அவரது மறைவுக்கு கண்ணீர் விட்டனர். இதனால் அந்த கிராமமே சோகமயமாகக் காணப்பட்டது.

போலீசார், அவரது மறைவுக்காக கையில் கருப்பு பட்டை அணிந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். சுமார் அரைமணி நேரம் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல், அங்கிருந்து ஊர்வலமாக அவரது தோட்டத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.



அங்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அதிகாலை 1. 10 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. பெரியபாண்டியனின் வீர மரணத்தால் அவரது சொந்த ஊரான சாலைப்புதூரே சோகத்தில் மூழ்கியது.

உறவினர்களும், குடும்பத்தினரும், சுற்று வட்டார கிராம மக்களும் அவரது மறைவுக்காக கண்ணீர் சிந்தினர்.

.

மூலக்கதை