மெரினாவில் 4 நாட்களாக சுற்றி திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மெரினாவில் 4 நாட்களாக சுற்றி திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

சென்னை: ெபற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு ஓடி வந்து, கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் சுற்றி திரிந்த பள்ளி மாணவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை அம்பத்தூர் ஐசிஎஸ் காலனியை சேர்ந்தவர் மணி.

கூலித் தொழிலாளி. இவருக்கு சதீஷ் (13) என்ற மகன் உள்ளார்.

சதீஷ் அருகில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் சதீஷ் அடம் பிடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி சதீஷ் பள்ளிக்கு செல்லமாட்டேன்  என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவனது தந்தை மணி கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சதீஷ் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தலைமறைவானார்.

10ம் தேதி மாலை மகன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் சதீஷ் கிடைக்க வில்லை.


இதுகுறித்து தந்தை மணி அம்பத்தூர் காவல் நிலையத்தில் மகன் மாயமானதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையின் பின்புறம் இன்று அதிகாலை பள்ளி சீருடையில் சிறுவன் ஒருவர் தூங்கி கொண்டிருந்தான்.

இதுகுறித்து மெரினா கடற்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் மெரினா காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

அதன்படி விரைந்து வந்த போலீசார் பள்ளி மாணவனை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அம்பத்தூரில் மாயமான பள்ளி மாணவன் சதீஷ் என தெரியவந்தது.

தந்தை திட்டியதால் கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் சுற்றி வந்ததாக தெரிவித்தான். அதைதொடர்ந்து மெரினா போலீசார் அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி பள்ளி மாணவனின் பெற்றோர் இன்று காலை மெரினா காவல் நிலையத்திற்கு வந்து மகனை மீட்டு சென்றனர்.

.

மூலக்கதை