ஓகியால் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி குமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு: 25 அரசு பஸ்கள் உடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓகியால் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி குமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு: 25 அரசு பஸ்கள் உடைப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் இறந்த அனைவரின் குடும்பத்துக்கும் ரூ. 20 லட்சம் நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். புயல் தாக்கத்தால் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தொழில்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வீதம்  6 மாதங்கள் வழங்க வேண்டும். கால்நடைகள் இறப்பை கணக்கீட்டு உரிய இழப்பீடு அறிவிக்கப்பட வேண்டும்.

குடியிருப்பு இழந்தவர்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். புயலால் முறிந்து விழுந்த செவ்வாழை ஒன்றுக்கு ரூ. 1500ம், மற்ற வாழைக்கு ரூ. 1000மும், தென்னை, ரப்பர் மரங்களுக்கு ரூ. 15 ஆயிரமும் வழங்க வேண்டும்.



தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று (15ம்தேதி) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், வியாபார அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன. அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

இதையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், குளச்சல், தக்கலை பகுதிகளில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன
.


நேற்று இரவு முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் ஆங்காங்கே உடைக்கப்பட்டன. கருங்கல், திருவட்டார், தக்கலை, நாகர்கோவில் என அடுத்தடுத்து பஸ்கள் உடைக்கப்பட்டதால் இரவு நேர போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது.

இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் 25 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டு இருந்தன. இதில் 4 கேரள அரசு பஸ்கள் ஆகும்.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வர வேண்டிய கேரள அரசு பஸ்கள் அனைத்தும், மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. காலை பஸ்கள் இயங்காததால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

காலை 8 மணிக்கு பின்னர், வெளியூருக்கு செல்ல வேண்டிய பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. டவுன் பஸ்கள் அனைத்தும் காலை 9 மணிக்கு பிறகு தான் இயங்க தொடங்கின.

பஸ்களிலும் கூட்டம் இல்லை.

முழு அடைப்பையொட்டி முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பஸ்கள் உடைப்பு சம்பவம் தொடர்பாக இன்று காலை வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டு இருப்பதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை