ஆர்.கே.நகரில் பிரசாரம் உச்சக்கட்டம்: வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகரில் பிரசாரம் உச்சக்கட்டம்: வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன

சென்னை: ஆர். கே. நகர் தொகுதிக்கு வருகிற 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ கரு. நாகராஜ், சுயேட்சையாக டி. டி. வி. தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

59 பேர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக வேட்பாளருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.   இந்நிலையில், வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகளும் வாக்கு சேகரிக்கின்றனர்.

இதனால், ஆர். கே. நகர் தொகுதி முழுவதும் வெளிமாவட்டத்து நிர்வாகிகளாக காட்சியளிக்கின்றனர். ஓட்டல்கள், வீடுகள் எடுத்து தங்கி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.



திமுக வேட்பாளருக்கு ஆதரவாக, செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு  ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜ வேட்பாளர் கரு. நாகராஜனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிேயார் பிரசார களத்தில் குதித்துள்ளனர்.



அதே போல டி. டி. வி. தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பிரசாரம் வருகிற செவ்வாய்கிழமை மாலையுடன் முடிகிறது.

அது மட்டுமல்லாமல் வாக்குப்பதிவுக்கு 5 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தேர்தல் பிரசாரமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

தலைவர்கள் தொகுதியை முற்றுகையிட்டு கடைசி கட்ட பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

சில தலைவர்கள் ஜீப் உள்ளிட்ட திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினராக காட்சியளித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். வாகன சோதனையும் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்லாமல் பிரசாரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.



.

மூலக்கதை