வாக்குறுதியை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது: சென்னையில் 50% பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாக்குறுதியை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் தொடங்கியது: சென்னையில் 50% பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி

சென்னை: ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை 3 மாதத்தில் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் முன்கூட்டியே தொடங்கியது. சென்னையில் 50% பஸ்கள் இயங்காததால் மக்கள், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 8 கோட்டங்களாக செயல்படுகிறது. இதில், கண்டக்டர்கள், டிரைவர்கள் உள்பட 1. 43 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

நிர்வாகத்தில் அதிகரிக்கும் முறைகேடு மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை படுமோசமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ₹8 கோடி நஷ்டத்தில் போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது.



இதை சமாளிக்க சென்னை பல்லவன் இல்லம் உட்பட அனைத்து போக்குவரத்து கோட்ட அலுவலகங்கள், பணிமனைகள் மற்றும் பஸ்கள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஊழியர்களுக்கான சலுகைகள் பறிக்கப்படுவதுடன் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கடந்த 1. 9. 2016 முதல் பஸ் ஊழியர்களுக்கு 13வது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. அதேபோல், ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணபலன்கள் ₹7,000 கோடி இன்னும் வழங்கவில்லை.

இதை கண்டித்து ஏற்கனவே பலமுறை போராட்டம் நடத்தினர். கடைசியாக கடந்த மே மாதம் 3 நாள் தொடர்ச்சியாக நடந்த பஸ் ஸ்டிரைக்கால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.


பின்னர், 3 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர்.

ஆனால், 7 மாதங்களாகியும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஸ்டிரைக் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, பின்னர் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்ததை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
இந்தநிலையில், ஊதிய உயர்வு தாமதமாவதை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் 48 மணி நேர தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நேற்று பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் தொடங்கியது.

இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு விடிய, விடிய ஊழியர்கள் பல்லவன் இல்லம் முன்பு காத்திருந்தனர்.

அதே போல், கோவை, சேலம் ஆகிய பிற மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் யாரும் அழைத்து பேசாததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

ஊழியர்கள் பலர் விடுமுறை எடுத்து போராட்டத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இன்று போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் பிரச்னையை தீர்க்காவிட்டால் ஸ்டிரைக் நடத்துவோம் என தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தனர். இதற்கிடையில், எண்ணூர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பல பணிமனைகளில் இன்று காலை முதல் பஸ்கள் இயங்கவில்லை.

தண்டையார்பேட்டையில் சுமார் 170 பஸ்கள் உள்ள நிலையில் இன்று காலை வெறும் 40 பஸ்களே இயக்கப்பட்டன.

அதேபோல், ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பணிமனைகளிலும் இன்று குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. தொடர்ந்து, இன்று பிற்பகல் ஒட்டுமொத்த டிரைவர்களும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கடந்த முறை போன்று இந்த முறையும் முன்கூட்டியே பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. எண்ணூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதாவரம், ஐயப்பன் தாங்கல்,  பூந்தமல்லி, குன்றத்தூர் ஆகிய டெப்போக்களில் இருந்து இன்று அதிகாலை முதல் 50 சதவீதத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்துக்கு சென்றுவிட்டனர். இதனால், இன்று காலை பணிக்கு சென்றவர்களும், பள்ளி, கல்லூரக்கு சென்ற மாணவர்களும் கடும் அவதிப்பட்டனர்.

பலர் பல மணி நேரம் காத்திருந்து ஆட்டோவில் சென்றனர்.

சிலர் நடந்தே அலுவலகத்திற்கு, பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றனர்.

காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து  தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பேட்ஜ்  அணிந்து 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மொத்தம் 2 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 150 பஸ்கள் இயங்கவில்லை.

2 மாவட்டங்களிலும் உள்ள டெப்போக்கள் முன்பு ஊழியர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை கோட்டத்தில் மொத்தம் 3 ஆயிரம் பஸ்களில், ஆயிரத்து 60 பஸ்கள் ஓடவில்லை.

இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் பஸ்கள் 40 முதல் 50 சதவீதம் வரை இயங்கவில்லை.

இதுகுறித்து ஊழியர்கள் கூறியதாவது: பிற துறைகளுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து ஊழியர்கள் மிகவும் கடுமையான பணி செய்து வருகிறோம்.


ஆனால், மற்ற துறைகளைவிட எங்களுக்கு தான் மிக, மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. காலியிடங்கள் உள்ளதால் வேலை முடிந்தும் பல மணி நேரம் கூடுதலாக உடல் சோர்வுடன் பணியாற்றி வருகிறோம்.

ஆனால் அதற்குரிய பலனை தர அரசு மறுக்கிறது. பல லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு நாங்கள் படும் வேதனை தெரிவதில்லை.

எங்கள் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இனியும் அரசு அவமதித்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை