திமுக கருப்புக்கொடி போராட்டம்: மாற்று பாதையில் சென்று கவர்னர் ஆய்வு: கடலூரில் பதற்றம்; போலீஸ் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக கருப்புக்கொடி போராட்டம்: மாற்று பாதையில் சென்று கவர்னர் ஆய்வு: கடலூரில் பதற்றம்; போலீஸ் குவிப்பு

கடலூர்: கடலூரில் இன்று ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மாற்றுப்பாதையில் சென்று கவர்னர் ஆய்வு பணி மேற்கொண்டார்.


தமிழகத்தில் முதன் முறையாக கடந்த மாதம் 14ம் தேதி கோவையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால்  கவர்னர், இனி எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து நெல்லையில் கடந்த 6ம் தேதி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இன்று கடலூரில் அவர் ஆய்வு செய்தார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் அதிகார வரம்பு மீறலை கண்டித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்ததின் பேரில் கடலூரில் இன்று காலை கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பபோவதாக திமுகவினர் அறிவித்திருந்தனர். இதனால் பாரதிவீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகம் முன்பு காலை முதலே திமுகவினர் குவிந்தனர்.

இவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்துகொண்டனர். இதையடுத்து ஏராளமான போலீசார் திமுக அலுவலகத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 9. 30 மணிக்கு புறப்பட்டு கடலூர் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவர் செல்லும் பாதையில் அவரது காரை முற்றுகையிட்டு கருப்புக்கொடி காட்ட திமுகவினர் திட்டமிட்டு இருந்ததால் அவர் மாற்று பாதை வழியாக கடலூர் வண்டிப்பாளையம் சென்று ஆய்வு பணியை ேமற்ெகாண்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த திமுகவினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து கவர்னர் தங்கியிருக்கும் சுற்றுலா மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் வண்டிப்பாளையத்தில் தூய்மை பணியை முடித்துவிட்டு அண்ணாமேம்பாலம் பாரதி சாலை வழியாக கவர்னர் வாகனம் சுற்றுலா மாளிகை நோக்கி வந்தபோது பாரதி சாலையில் திரண்டிருந்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவர்னர் வாகனத்தின் முன்பு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் திமுகவினர் கருப்புக்கொடி காட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா மாளிகைக்கு சென்ற கவர்னர் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



முன்னதாக காலை 9. 40 மணிக்கு பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இருந்து கவர்னர் புறப்பட்டார். இதற்கிடையே பாரதிசாலையில் திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கவர்னரின் கான்வாய் வாகனம் பாரதிசாலையை தவிர்த்து நெல்லிக்குப்பம் சாலை, கம்மியாம்பேட்டை, திருப்பாதிரிபுலியூர் சாலை வழியாக வண்டிப்பாளையம் சென்றடைந்தது.

அங்கு கற்பகவிநாயகர் தெருவில் சாலையோரம் கிடந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கவர்னர் கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கு கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.



ஆணையருக்கு டோஸ் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் இன்று காலை தூய்மைப்பணி மேற்கொண்ட கவர்னர் தொடர்ந்து அம்பேத்கர் நகரில் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே சாலை முழுவதும் குப்பைகள் தேங்கிக்கிடந்ததால் ஆணையர் முஜிபுர் ரகுமானை அழைத்து கடுமையாக கண்டித்தார்.

ஏன் இதுபோன்று நகரை அசுத்தமாக வைத்திருக்கிறீர்கள்? துப்பரவு பணியாளர்களை கொண்டு முறையாக பணி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.


.

மூலக்கதை