யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் : சிவகார்த்திகேயன்

தினமலர்  தினமலர்
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் : சிவகார்த்திகேயன்

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், முன்னணிக்கு வந்த நடிகர், சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் படங்களுக்கு கோலிவுட்டில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதுவரை காமெடி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த சிவா, முதல் முறையாக ஓர் ஆக் ஷன் படத்தில் நடித்துள்ளார்; அவர் அளித்த பேட்டி:

வேலைக்காரன் படத்தின் கதை என்ன?

அறிவு என்ற பையனுடைய உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் தொகுப்பு தான், இந்த படம். இதுவரை நான் நடித்த படங்களில், வேலைக்காரன் வேறு மாதிரியான படமாக இருக்கும். இயக்குனர் மோகன் ராஜாவின் கதைக்குள் போய், அதற்கேற்ப நடித்துள்ளேன்.

ஓர் ஆண்டுக்கு ஒரு படம் தான் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா?

ஒரு படத்தின் கதையும், அதற்கான மெனக்கெடலும் அப்படி அமைகின்றன. ரெமோ படத்துக்காக, 10 கிலோ எடை குறைத்தேன். நான் தேர்வு செய்யும் கதைகளை பொறுத்தே, படத்தின் படப்பிடிப்பு எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். இனிமேல், ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க முயற்சிப்பேன்.

சீரியசான படத்தில் நடிக்க முடிவு செய்தது ஏன்?

தனி ஒருவன் படத்துக்கு பின், மோகன் ராஜா, அவரது ஸ்டைலில், எந்த சமரசமும் இல்லாமல் இந்த கதையை தயார் செய்துள்ளார். அவர் வடிவமைத்த திரைக்கதை தான், இது. காமெடி, படத்தின் காட்சிகளுடன் சேர்ந்து வருமே தவிர, தனியாக வராது.

நயன்தாராவுடன் நடித்த அனுபவம் ?

அவங்க சிரிக்க ஆரம்பிச்சாங்கனா, நிறுத்துறது ரொம்ப கஷ்டம். சதீஷ், பாலாஜி, ரோபோ என,
எல்லாரிடமும், அமைதியாக இருக்கும்படி சொல்வாங்க. அவங்க, சீனியர் நடிகை. படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டால், கேரவன் உள்ளே போகவே மாட்டாங்க. கதையில் ஒன்றிப் போய் நடிப்பாங்க. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் இனி, அதிகமாக வரும். அதற்கான துவக்கமாக, நயன்தாராஇருக்காங்க.

ஒரு இசை வெளியீட்டு விழாவில் அழுதீங்களே... ஏன்?

இப்பவும் சில பிரச்னைகள் இருக்கு; அது, அது பாட்டுக்கு போயிட்டிருக்கு. இப்போது, நான் எதற்காகவும் அழுவது இல்லை. எல்லா பிரச்னைகளையும், புன்னகைத்தபடியே சந்திக்கிறேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகி விட்டதே; நீங்களும், அடுத்த தேர்தலில் உங்க சொந்த ஊரான திருச்சியில் நிற்கலாமே?

திருச்சி பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்காக நின்ற அனுபவம் உண்டு. அரசியல், நமக்கு சரிப்பட்டு வராது. யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பக்குவம் நமக்கு வேண்டும். அந்த பதில், சரியாக இருந்தால், மக்கள் ஏற்றுக்கொள்வர்.

சந்தானம் படம், உங்க படத்துக்கு போட்டியா வருதே?

நான் எந்த படத்தையும் போட்டியாக நினைத்தது இல்லை; எனக்கு என் படம் தான் போட்டியாக இருக்கும். கவுண்டமணி, விவேக், வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, காமெடியில் கொடி கட்டி பறந்தவர்சந்தானம்; அவர் இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை. அவர் எடுத்த முடிவு, துணிச்சலானது. ஹீரோவாக அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.

சின்னத்திரையில் இருந்து, பெரிய திரைக்கு வந்த அனுபவம்?

இப்போது சின்னத்திரையில் தோன்றுபவர்கள், உடனடியாக பிரபலமாகி விடுகின்றனர். ஆனால், நான் பிரபலமாவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. சின்னத்திரையில் தோன்றினால், உடனே சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. சொன்னா நம்பமாட்டீங்க; முதல் முதலாக, 'டிவி'யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மேடை ஏறியபோது, பயங்கரமாக சொதப்பி விட்டேன். என்னை மேடையில் இருந்து இறக்கி விட்டுட்டாங்க.

அரசை விமர்சித்தால், அந்த படம் வெற்றி பெறுமா ?

அப்படி எல்லாம் இல்லை. வெற்றி பார்முலா தெரிந்தால், எல்லாருமே ஹிட் படங்கள் தான் கொடுப்பாங்க. ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

மூலக்கதை