மாமியாரை தயாரிப்பாளராக்கிய ஜெயம்ரவி

தினமலர்  தினமலர்
மாமியாரை தயாரிப்பாளராக்கிய ஜெயம்ரவி

மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வரும் 'ஜெயம்' ரவி கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'டிக் டிக் டிக்' படம் அடுத்த மாதம் (ஜனவரி) 26-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டப்பிங்கை முடித்த கையோடு தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் ஜெயம் ரவி. அவருடைய அடுத்தப்படம் என்பது... சுந்தர்.சி. இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட 'சங்கமித்ரா'படம் என்று நினைக்க வேண்டாம்.

'சங்கமித்ரா' படப்பிடிப்பு துவங்குவதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை. எனவே அதற்கு முன்பாக, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், "அடங்க மறு" என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். 'விக்ரம் வேதா' படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார்.

'மாயா', சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பட பூஜை நேற்று எளிமையாக நடந்தது.

ஜெயம் ரவியின் 24-ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இவர் யார் தெரியுமோ? ஜெயம் ரவியின் மாமியார்.

மூலக்கதை