அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி : மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 ம் ஆண்ட மார்ச் 31 வரை நீட்டிப்பதற்கான அரசாணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இந்நிலையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலனை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும். அதற்குள் ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் 31 வரை ஆதார் எண்ணை அரசு திட்டங்களுடன் இணைக்காதவர்களுக்கும் திட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, ஆதார் எண் இணைப்பதை எதிர்த்த பிற வழக்குகளின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 17 க்கு ஒத்திவைத்துள்ளது.

மூலக்கதை