ஆர்.கே.நகரில் 968 தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: திமுக வேட்பாளர் ஐகோர்ட்டில் அவசர வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகரில் 968 தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: திமுக வேட்பாளர் ஐகோர்ட்டில் அவசர வழக்கு

சென்னை: ஆர். கே. நகர் தொகுதியில் உள்ள 968 தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கோரியும், வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய வலியுறுத்தியும், கூடுதல் மத்திய போலீஸ் படையை அமர்த்த கோரியும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆர். கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து அதிமுகவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதியில் தொடர்ந்து அசாதரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் படையும், துணை ராணுவ படை வரழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு போலீசும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாடு போலீசார் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.



எனவே, பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும், நியாயமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்கும் கூடுதல் மத்திய ரிசர்வ் படையை தேர்தல் பணியில் அமர்த்த வேண்டும். மேலும், முறைகேடுகளை தடுப்பதற்கும், முறைகேடு நடப்பதை கண்டுபிடிக்கவும், தொகுதியில் உள்ள 968 தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.

வாக்குப்பதிவை இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மருதுகணேஷ் சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன், நீதிபதிகள் டி. எச். சிவஞானம், ரவிசந்தர பாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் இன்று காலை முறையிட்டார். இதை கேட்ட நீதிபதிகள் வரும் திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


.

மூலக்கதை