திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா பக்தர்கள் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா பக்தர்கள் வசதிக்காக மொபைல் கழிப்பறைகள்

காரைக்கால்: திருநள்ளாறில் உள்ள பிரசித்திபெற்ற தர்பாராண்யேஸ்வரர் கோயிலில்(சனி பகவான் ஆலயம்) வரும் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. கலெக்டர் கேசவன் தலைமையில், கோயில் நிர்வாக அதிகாரி விக்ரந்த்ராஜா பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார். கடந்த 3 வாரமாக, கட்டணம் செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் அனைவரும் கோயிலின் உள்ளே மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் செல்லும் வகையில் புதிய நடைமுறை அமலானது.

அதன்படி 3 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 லட்சம் பக்தர்கள்,  எளிமையாக தரிசித்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் நடந்து செல்ல ஏதுவாக சாய்வுதளம், கூடுதல் மின் விசிறி, ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள், திருநள்ளாறு ரிங் ரோடு அருகே நிறுத்த, வயல்வெளியாக இருந்த பகுதிகள் மணல் நிரப்பப்பட்டு, அதன் மேல் செம்மண் கொட்டி நிரந்தர தரையாக மாற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக நளன்குளம், கோயிலின் நான்கு வீதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதல் வசதியாக, கழிவறை இல்லாத இடங்களில் 100 மொபைல் கழிவறைகள் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மொபைல் கழிவறைகளை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




.

மூலக்கதை