பலத்த பாதுகாப்புகளை மீறி இன்று அதிகாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்: போலீசார் உடந்தையா? எஸ்பி விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலத்த பாதுகாப்புகளை மீறி இன்று அதிகாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்: போலீசார் உடந்தையா? எஸ்பி விசாரணை

வேலூர்: வேலூர் தொரப்பாடியில் மத்திய சிறை உள்ளது. இங்கு ராஜீவ் கொலை கைதி உள்பட 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிறையின் சுற்றுச்சுவர் மீது இரும்பு கம்பி வேலி மற்றும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நாள்தோறும் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புமிக்க இந்த சிறைச்சாலையில் அடிக்கடி கைதிகள் செல்போன், போதை பொருள் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கும். இதை சிறைத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் வழக்கம்போல் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது தொரப்பாடி-அரியூர் செல்லும் சாலை காமராஜர் நகர் விரிவு பகுதியின் பக்கவாட்டு சுற்றுச்சுவர் மீதுள்ள வேலி அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பு கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் வேஷ்டி ஒன்று தொங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் சிறையில் இருக்கும் கைதிகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலியை சேர்ந்த விசாரணை கைதி சகாதேவன்(42) என்பவர் சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது. இவர் தனது விவசாய நிலத்துக்கு அருகில் வசிக்கும் பட்டம்மாள்(70) என்பவரை கடந்த அக்டோபர் மாதம் 3ம்தேதி விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து மற்ற கைதிகளை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சிறையில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், இன்று அதிகாலை 3 மணியளவில் சகாதேவன் சிறைக்குள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை 3 மணிக்கு மேல் தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. சகாதேவன் சிறையில் இருந்து தப்பி செல்வதற்கு சிறையில் இருந்த கைதிகள் அல்லது பாதுகாப்பு போலீசார் யாராவது உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுபற்றி தகவலறிந்த பாதுகாப்பு பட்டாலியன் எஸ்பி ரவீந்திரன் உடனடியாக சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்.




.

மூலக்கதை