காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 ராணுவ வீரர்கள் மாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 5 ராணுவ வீரர்கள் மாயம்

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த கொசூர்  நாச்சிகளத்துப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி(33).   14 ஆண்டுகளாக  ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.   தமிழரசி(27) என்ற மனைவியும், சுபிக்சன்(6), மெர்வின்(3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மூர்த்தி ஜம்மு காஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தில் குரேஷ் என்ற இடத்தில் இந்திய எல்லைப்பகுதியில் பணியாற்றி  வருகிறார்.


நேற்று காலை 11 மணியளவில் காஷ்மீர் ராணுவ  அலுவலகத்திலிருந்து தமிழரசியை செல்போனில் தொடர்பு  கொண்டனர். மூர்த்தி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் 2 நாட்களுக்கு  முன் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றனர்.

அதன்பின் இதுவரை முகாம்  திரும்பவில்லை. அவர்கள் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம்.

அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக தேடி வருகிறோம் என்று தகவல் அளித்தனர்.

இதைக்கேட்டதும், தமிழரசி கதறி  அழுதார்.

தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அவரது  வீட்டில் குவிந்தனர். மாயமான மூர்த்தி கடைசியாக தீபாவளிக்கு ஊருக்கு  வந்து சென்றதாகவும், அவர்  ஓய்வு பெற இன்னும் ஒன்றரை ஆண்டுகள்  இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுபற்றி மூர்த்தியின் மனைவி தமிழரசி கூறுகையில், நேற்று காலை காஷ்மீர் ராணுவ அலுவலகத்தில் இருந்து பேசியவர், எனது கணவர் பனிச்சரிவில் சிக்கி விட்டதாக கூறினார். அதன்பிறகு இதுவரை எந்த தகவலும் அங்கிருந்து வரவில்லை.

எனவே கரூர் மாவட்ட கலெக்டர் எனது கணவர் பற்றி முறையாக விசாரித்து, உரிய தகவல்களை எங்களுக்கு தர வேண்டும். மேலும் எனது கணவரை உயிருடன் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் திமுக எம்எல்ஏ ராமர் இன்று ராணுவ வீரர் மூர்த்தியின் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் நடந்த விவகாரம் குறித்து விசாரித்தார்.




.

மூலக்கதை