அடையாளம் காண முடியாத நிலையில் கேரள மருத்துவமனைகளில் 40 உடல்கள்: குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடையாளம் காண முடியாத நிலையில் கேரள மருத்துவமனைகளில் 40 உடல்கள்: குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களா?

நாகர்கோவில்: தமிழகம், கேரளாவை உலுக்கிய ஓகி புயல் கடந்த 29ம் தேதி கடந்து சென்ற நிலையில் குமரி மாவட்டத்தில் கடலிலும், கரையிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி சென்றது.
ஓகி புயலில் மரணமடைந்தவர்களின் உடல்கள் குமரி மாவட்ட பகுதிகளில் எங்கும் கரை சேரவில்லை.

குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் கேரள கடல் பகுதியில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருவதால் அவர்களை கேரளாவில் தேடும் பணிகள் அதிகம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் எத்தனை நாட்கள் தேடுதல் நடத்தப்பட்டது, எத்தனை பேர் உயிரோடு மீட்கப்பட்டனர், எத்தனை உடல்கள் கரையொதுங்கின என்ற தகவல்கள் ஏதும் குமரி மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை.



வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் தங்களை பிரிந்து மீன்பிடிக்க சென்ற சொந்தங்கள் அனைவரும் கரை திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க குமரி மாவட்ட நிர்வாகம் கடைசியாக அளித்த புள்ளி விபரங்கள்படி 433 மீனவர்கள் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர்.

இதில் 37 பேர் நாட்டுப்படகு மீனவர்கள், 398 பேர் விசைப்படகு மீனவர்கள் ஆவர். கிராமங்கள் வாரியாக நீரோடி 39, மார்த்தாண்டம் துறை 11, வள்ளவிளை 223, இரவிபுத்தன்துறை 1, சின்னத்துறை 66, தூத்தூர் 39, பூத்துறை 28, குளச்சல் 13, மிடாலம் 13, பேர் கரை திரும்பவில்லை.

இதனால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதுவரை 2 மீனவர்களை மட்டுமே இறந்தவர்களாக அறிவித்துள்ளது.



இதற்கிடையே ஓகி புயலில் அடித்து செல்லப்பட்டு கடலில் மிதந்ததும், கரையொதுங்கியதும், சக மீனவர்களால் மீட்கப்பட்டது என்று கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இவை அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின்னரே உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

முழு அடைப்பு  இந்நிலையில், ஓகி புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, குமரி மாவட்டத்தில் நாளை விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

.

மூலக்கதை