ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தது: முதல்வர், உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடல் சென்னை வந்தது: முதல்வர், உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி

சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின்  உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.   விமான நிலையத்தில் அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3. 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையில் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், காவலர்கள் குருமூர்த்தி, எம்புரோஸ், சுதர்சன் ஆகிய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கடந்த மாதம் 8ம் தேதி ராஜஸ்தான் சென்றனர்.

நேற்று முன்தினம் பாலி மாவட்டம் ஜெய்தரன் காவல் எல்லைக்குட்பட்ட ராம்புரா கலான் கிராமத்தின் அருகே உள்ள செங்கல் சூளை தயாரிக்கும் இடத்தில் குற்றவாளி நாதுராம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் தனிப்படையினர் தன்னிச்சையாக சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளி நாதுராமை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் குற்றவாளியின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தனிப்படையினர் மீது கற்கள் மற்றும் பாட்டில் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது ஏற்பட்ட மோதலில் இன்ஸ்ெபக்டர் முனிசேகர் துப்பாக்கி கீழே விழுந்தது.

இதையடுத்து அந்த துப்பாக்கியை எடுத்து நாதுராம் சுட்டதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் 3 காவலர்கள் காயமடைந்தனர். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடலை உள்ளூர் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜோத்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர்.

இந்நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ் குமார் தலைைமயிலான போலீசார் நேற்று விமானம் மூலம் ஜோத்பூர் சென்றனர். அங்கு பெரியபாண்டி உடலை சென்னைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

இன்று காலை 8 மணிக்கு பெரியபாண்டி உடல், ஜோத்பூர் விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டது.

மதியம் 12. 20 மணிக்கு பெரியபாண்டி உடல் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.

உடன் தனிப்படையில் இருந்த தலைமை காவலர் ஏம்புரோஸ் வந்தார். பெரியபாண்டியின் உடல், அஞ்சலிக்காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், டிஜிபி. டி. கே. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

அதைதொடர்ந்து, மற்றொரு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பெரியபாண்டி உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வாகனம் மூலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் போலீசாரின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் துப்பாக்கி குண்டுகள் முழங்கி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

.

மூலக்கதை