பாக்., சிறையில் ஜாதவை சந்திக்க அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு

தினமலர்  தினமலர்
பாக்., சிறையில் ஜாதவை சந்திக்க அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு

இஸ்லாமாபாத்: 'உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான, குல்பூஷண் ஜாதவை, 47, சிறையில் சந்திக்க, இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது' என, சர்வதேச நீதிமன்றத்தில், பாகிஸ்தான் கூறியுள்ளது.
நம் கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவருக்கு, தூக்கு தண்டனை விதித்து, ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அவருக்கான தண்டனயை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜாதவை, அவரது மனைவி மற்றும் தாய், வரும், 25ம் தேதி சிறையில் சந்திக்க ,பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையின்போது, 'ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்க அனுமதி அளிக்க முடியாது' என, பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இது குறித்து, பாகிஸ்தான் பத்திரிகைகளில் வந்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: சிறையில் உள்ள ஜாதவை சந்திக்க அனுமதி கோரி, இந்திய அரசு பலமுறை மனுக்களை கொடுத்துள்ளது. ஆனால், அவரைச் சந்திக்க அனுமதி அளிக்க முடியாது என, சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.
அவர் உளவு பார்க்க வந்ததால், அவரிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காகவே, இந்திய அரசு அவரை சந்திக்க விரும்புகிறது. வியன்னா ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டைச் சேர்ந்த கைதியை சந்திக்க, அந்த நாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், இவர் உளவு பார்க்க வந்தவர். அதனால் அனுமதி அளிக்க முடியாது என, பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மூலக்கதை