காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
காத்திருக்கும் சவால்கள் திருமணத்திற்கு பின்பும் அசத்துவாரா கோஹ்லி?

திருமணம் ஆன இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. இந்த டெல்லி வீரரின் வாழ்க்கையில், அனுஷ்கா சர்மா அதிக செல்வாக்கு கொண்டவர்.

தனது 52 சர்வதேச சதங்களில் 36 சதங்களை 2013ம் ஆண்டில் இருந்து விராட் கோஹ்லி விளாசியுள்ளார். அதாவது அனுஷ்கா சர்மாவை முதல் முறையாக சந்தித்த பிறகு.

தற்போது அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து விட்டதால், விராட் கோஹ்லி இன்னும் உச்சபட்ச பார்முக்கு செல்வாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த நேரத்தில், திருமணம் முடிந்த பிறகு மற்ற கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடு எப்படி இருந்தது? என்பதை பார்ப்பது சுவாரசியமானதாக இருக்கும்.



 சீனியர் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனான டோனி, கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் சாக்‌ஷியை திருமணம் செய்து கொண்டார். டோனி தனது 9,891 ஒரு நாள் போட்டி ரன்களில், 4,158 ரன்களை திருமணத்திற்கு பிந்தைய 7 ஆண்டுகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

அதுதவிர 2011ம் ஆண்டு உலக கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றவும் உதவினார். 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடர் தொடங்க சில நாட்களே இருந்த நிலையில், டோனி-சாக்‌ஷி தம்பதியருக்கு ஜிவா பிறந்தார்.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியா, அந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. ரஹானே-ராதிகா திருமணம் 2014ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்றது.

அதன்பின் ரஹானே தனது கேமை முற்றிலும் வேறுபட்ட லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். ரஹானேவின் 2,826 டெஸ்ட் ரன்களில், 2,609 ரன்கள் அவரின் திருமணத்திற்கு பிறகுதான் வந்துள்ளன.

2015ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ரித்திகாவுடன் திருமணம் முடிந்த பிறகு ரோகித் சர்மா அன் ஸ்டாப்பபிள். கடந்த 2 ஆண்டுகளில், 1,642 ஒரு நாள் ரன்களை ரோகித் சர்மா விளாசியுள்ளார்.

அத்துடன் தனது 15 ஒரு நாள் சதங்களில் 7 சதங்களையும் இந்த கால கட்டத்தில்தான் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

 இந்த வரிசையில் விராட் கோஹ்லி முன் பெரிய சவால் காத்திருக்கிறது.

திருமணத்திற்கு பின் அவர் பங்கேற்க உள்ள முதல் தொடரே, சவால் நிறைந்தது. இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம்தான், திருமணத்திற்கு பின் விராட் கோஹ்லி எதிர்கொள்ளும் முதல் தொடர்.

இதுதவிர இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள், 2019ம் ஆண்டு உலக கோப்பை என இனி இந்திய அணி விளையாட இருக்கும் பெரும்பாலான தொடர்கள் மிகவும் கடினமானவைதான். இவை எல்லாவற்றிலும் ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் விராட் கோஹ்லி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.



.

மூலக்கதை