பாலியல் புகார்: டிரம்ப் பதவி விலக வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: ''பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கியுள்ள டொனால்டு டிரம்ப், 71, அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும்,'' என, பெண் எம்.பி., கிரிஸ்டன் கில்லிபாராண்ட் வலியுறுத்தி
உள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் மீது பல பெண்கள், பாலியல் புகார் கூறினர்.
இந்நிலையில், இந்த பெண்கள், மீண்டும் அந்த புகார்களை கூறி, டிரம்ப் மீது பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.
'மி டூ' எனப்படும், பாலியல் புகார்கள் குறித்து, சமூக வலைதளங்களில் பல பெண்கள், வெளிப்படையாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கூறி வருகின்றனர்.
அதன்படி, டொனால்டு டிரம்ப் மூலம், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து, பல பெண்கள் புகார் கூறி வருகின்றனர்.
டிரம்ப் மீதான இந்த புகார்கள், தற்போது அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
'டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும்' என, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சாரா சான்டர்ஸ் இதை மறுத்துள்ளார்.
''அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் மீது புகார்கள் கூறப்பட்டன. ஆனால், அவை பொய்யானவை என, அவர் மறுத்துள்ளார். அதன் பின்னே, அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால், அது குறித்து மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை,'' என, சாரா சான்டர்ஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த, 43 பெண், எம்.பி.,க்கள், பார்லிமென்ட் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான புகார்கள் மிகவும் தீவிரமானவை; அவற்றை நிராகரிக்க முடியாது. அவை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். தன் தரப்பு விளக்கத்தையும் டிரம்ப் அளிக்கட்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண், எம்.பி., கிரிஸ்டன் கில்லிபாராண்ட், ''டிரம்ப், அதிபர் பதவியில் இருந்து விலகி, விசாரணையை சந்திக்க வேண்டும்,'' என, வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை