சரப்ஜித் கொலை வழக்கில் சிறை அதிகாரி வாக்குமூலம்

தினமலர்  தினமலர்

லாகூர்: பாக்., சிறையில், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியர், சரப்ஜித் சிங், 49, கொலை வழக்கில், சிறை அதிகாரி, நீதிமன்றத்தில் தன் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இந்தியாவைச் சேர்ந்த, சரப்ஜித் சிங், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், 1990ல் நடந்த குண்டுவெடிப்பில், அவருக்கு தொடர்பு உள்ளதாகவும், பாக்., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு, பாக்., நீதிமன்றம் துாக்கு தண்டனை அறிவித்திருந்தது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை, அவரது குடும்பத்தார் மறுத்தனர். அவருடைய விடுதலைக்காக, மத்திய அரசு, பாக்., அரசுடன் பேச்சு நடத்தியது.
இந்நிலையில், 2013ல், சிறையில், சக கைதிகளால், சரப்ஜித் சிங் அடித்துக் கொல்லப்பட்டார்.
சரப்ஜித் சிங் கொலை வழக்கை, லாகூர் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நீதி விசாரணை நடத்தப்பட்டு, விசாரணைக் குழு, தன் அறிக்கையையும் தாக்கல் செய்தது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரப்ஜித் சிங் அடைக்கப்பட்டிருந்த, கோட் லாக்பத் சிறையின் கண்காணிப்பாளர் ஆஜராகி, தன் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

மூலக்கதை