மீண்டும் சந்திரனுக்கு வீரர்களை அனுப்பும் புதிய விண்வெளி கொள்கைக்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது தொடர்பான புதிய விண்வெளிக் கொள்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் அப்போலோ விண்கலத்தில் அந்நாட்டு வீரர்கள் கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ல் சந்திரனில் தரையிறங்கினர். அதன்பின்னர் விண்வெளி வரலாற்றில் அமெரிக்கா பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டது.இந்நிலையில், மீண்டும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய விண்வெளிக் கொள்கையை தயாரித்துள்ளது. இதில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையின்படி, மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இந்த முறை சந்திரனில் நம்முடைய கொடி மற்றும் காலடியை மட்டும் வைக்கப்போவதில்லை. மாறாக செவ்வாய்க்கு செல்வதற்கான அடித்தளத்தையும் அமைக்கவுள்ளோம். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காதான் தலைமை இடத்தில் உள்ளது. தொடர்ந்து அமெரிக்காதான் அந்த இடத்தை தக்க வைத்து கொள்ளும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், “தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இந்த புதிய கொள்கை மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கும். இதை மீண்டும் செயல்படுத்த அதிபர் டிரம்ப், தேசிய விண்வெளி கழகத்தை நிறுவியுள்ளார்’’ என்றார்.* சந்திரனுக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்டிராங்க்.* அமெரிக்காவை சேர்ந்த ஆம்ஸ்டிராங்குடன் எட்வின் ஆல்டரின், ைமக்கேல் கொலின்ஸ் என்ற 2 வீரர்களும் உடன் சென்றனர்.* ஆம்ஸ்டிராங்க் 8 நாட்கள், 14 மணிநேரம், 12 நிமிடம், 30 விநாடிகள் விண்வெளியில் இருந்தார்.* 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்போலோ 11 என்ற விண்கலத்தில் சென்று சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். * ஆம்ஸ்டிராங் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.

மூலக்கதை