விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மா காதல் திருமணம் இத்தாலியில் நடந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராட் கோஹ்லிஅனுஷ்கா சர்மா காதல் திருமணம் இத்தாலியில் நடந்தது

ரோம்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். தன் வாழ்க்கையில் அனுஷ்கா சர்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் விராட் கோஹ்லி வெளிப்படுத்தியுள்ளார்.

விராட் கோஹ்லி ரன் குவிக்க தடுமாறிய சமயங்களில், அனுஷ்கா சர்மாவை அதற்கு காரணமாக கூறுவதை ரசிகர்கள் சிலர் வாடிக்கையாக கொண்டிருந்தனர். பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அனுஷ்கா சர்மா மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் அந்த சமயங்களில் எல்லாம், அனுஷ்கா சர்மா எனக்கு ஊக்கம்தான் அளிக்கிறார். அவரை இடைவிடாது கிண்டல் செய்வது வேதனையாக உள்ளது என விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு இடையில் இருவருக்கும் பிரேக் ஆப் ஆனதாகவும் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் இருவரும் மீண்டும் சந்தித்து பேச தொடங்கி, அந்த செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

அவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது.

 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, இந்த ஆண்டின் மிகப்பெரிய திருமணங்களில் ஒன்றாக கருதப்படும், விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம், இத்தாலி நாட்டின் தென் பகுதியான டஸ்கனியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ேபார்கோ பினாச்சிட்டோ எனும் திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த விடுதியில், நேற்று மிகவும் ரகசியமாக நடைபெற்றது.

ஆனால் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தாங்கள் காதலித்த நாட்களில் அதை வெளி உலகிடம் மறைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில், மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 

விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம் பற்றிய செய்திதான் தற்போது சமூக வலை தளங்களை ஆக்கிரமித்துள்ளது. விராட் கோஹ்லி குருவாக மதிக்கும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், முகமது கைப், அனுராக் தாக்கூர், ஹர்ஷா போக்லே, புஜாரா, ஷிகார் தவான், உமேஷ் யாதவ், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், முகமது ஆமீர், ஷாகித் அப்ரிடி, சோயப் அக்தர், சாய்னா நெஹ்வால், ஆகாஸ் சோப்ரா, கீதா போகத் என ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஐசிசி, பிசிசிஐயும் தங்கள் வாழ்த்துக்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளன. இதர குடும்ப உறுப்பினர்களுக்காக, வரும் 21ம் தேதி புது டெல்லியிலும், தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்காக, வரும் 26ம் தேதி மும்பையிலும், விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 

 இந்தியா-இலங்கை இடையே தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்களில் ஓய்வு கேட்டது முதலே, விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம் குறித்த யூகங்கள் உலா வர தொடங்கின.

தற்போது அது நிரூபணமாகியுள்ளது. இந்தியா-இலங்கை இடையேயான தொடர் வரும் 24ம் தேதி முடிவடைகிறது.

அதன்பின் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக, 27ம் தேதி நள்ளிரவில் இந்திய அணி தென் ஆப்ரிக்கா புறப்படுகிறது. இதற்காக அனுஷ்கா சர்மாவும், விராட் கோஹ்லியுடன் இணைந்து தென் ஆப்ரிக்கா செல்கிறார்.

இருவரும் புத்தாண்டை ஒன்றாக வரவேற்கின்றனர். எனினும் ஜனவரி முதல் வாரத்தில் அனுஷ்கா சர்மா இந்தியா திரும்பி விடுவார்.

அதன்பின் அவர் வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார். இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையே முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின்
முதல் போட்டி கேப்டவுனில் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது.



இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட் நடிகையும் திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. மன்சூர் அலிகான் பட்டோடி-ஷர்மிளா தாகூர், ஹர்பஜன் சிங்-கீதா பஸ்ரா, யுவராஜ் சிங்-ஹசல் கீச், ஜாகிர்கான்-சகாரியா காட்ஜ் வரிசையில் தற்போது விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மா ஜோடியும் இணைந்துள்ளது.

* மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவருக்குமான திருமண உடைகளை, புகழ்பெற்ற பேஷன் டிசைனரான சப்யாசச்சி முகர்ஜி வடிவமைத்திருந்தார்.


* மும்பையின் வொர்லி பகுதியில் விராட் கோஹ்லி-அனுஷ்கா சர்மா குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து கொண்டபின்தான் இருவரும் 2013ம் ஆண்டில் இருந்து டேட்டிங் செய்ய தொடங்கினர்.


* விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் 20, ஒரு நாள் போட்டிகளில் 32 என மொத்தம் 52 சர்வதேச சதங்களை இதுவரை விளாசியுள்ளார். 2013ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால், ெடஸ்ட் போட்டிகளில் 17, ஒரு நாள் போட்டிகளில் 19 என மொத்தம் 36 சதங்களை அடித்துள்ளார்.

அதாவது அனுஷ்கா சர்மாவை சந்தித்தபின்தான் தனது 52 சதங்களில் 36 சதங்களை விராட் கோஹ்லி விளாசியுள்ளார்.


.

மூலக்கதை