எதிர்காலத்தில் செவ்வாய்க்கு அமெரிக்கர்களை அனுப்ப திட்டம்: நாசாவிற்கு டிரம்ப் உத்தரவு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: செவ்வாய்க்கு எதிர்காலத்தில் அமெரிக்கர்களை அனுப்பும் திட்டதிற்கு தயாராகும் வகையில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துமாறு நாசாவிற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிலவில் கால் பதித்தார். அவரை தொடர்ந்து இரண்டாவதாக கால் பதித்த பஸ் ஆல்ட்ரின், கடைசியாக 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1972-ம் ஆண்டில் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜாக் ஸ்கிமிட் ஆகியோர் முன்னிலையில் விண்வெளி கொள்கை திட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி நிலவுக்கு அமெரிக்கர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துமாறு அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எதிர்காலத்தில் செவ்வாய்க்கு அமெரிக்கர்களை அனுப்புவதற்கு முன் தயாரிப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலக்கதை