சரியாக வெடிக்காததால் மக்கள் தப்பினர் நியூயார்க் பேருந்து நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்

தினகரன்  தினகரன்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பேருந்து நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பேருந்து நிலையமும், மெட்ரோ ரயில் நிலையமும் அருகருகே உள்ளன. நேற்று காலை இவற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அலுவலகம் செல்லும் நேரம் என்பதால் மக்கள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர். அப்போது, உடலில் வயர்களையும், பைப் வெடிகுண்டையும் சுற்றிக் கொண்டு வந்த மர்ம நபர், பேருந்து நிலையம் அருகே வந்ததும் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். ஆனால், அந்த வெடிகுண்டு சரியாக வெடிக்கவில்லை. வெடிகுண்டின் ஒரு பகுதி மட்டுமே பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதை பார்த்ததும் மக்கள் அலறியடித்து ஓடினர். குண்டு வெடித்த இடத்தின் அருகே இருந்த சிலருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வங்க தேசத்தை சேர்ந்த அகாயத் உல்லா ( 27) என்ற ஐஎஸ் தீவிரவாதி என தெரிய வந்துள்ளது.

மூலக்கதை