சீன வீடியோவால் பரபரப்பு கண்ணுக்கு புலப்படாமல் ஆளையே மறைக்கும் ஆடை

தினகரன்  தினகரன்

பீஜிங் : மாயாஜால போர்வையை போர்த்திக் கொண்டதும், கண்ணுக்கு புலப்படாமல் மந்திரவாதி மறைந்து விடுவது விட்டலாச்சாரியா படத்திலும், ஹாலிவுட்டில் ஹாரிபாட்டர் போன்ற படங்களிலும் பார்த்திருக்கிறோம். உண்மையில் இப்படிப்பட்ட ‘இன்விசிபிள்‘ ஆடை தயாரிப்பது சாத்தியமா?ஆம்... அப்படிப்பட்ட ஆடை தயாரிக்கப்பட்டு விட்டது என அதிர்ச்சியையும், பிரமிப்பையும் ஒரு சேர கலந்து அளித்திருக்கிறது சீன வீடியோ பதிவு. சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் புலனாய்வு பிரிவு துணைத்தலைவரான சென் செய்கு என்பவர் அந்நாட்டின் பிரபல சமூக வலைதளமான வெய்போவில் வீடியோ ஒன்றை இம்மாத தொடக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தோன்றும் நபர் ஒருவர், மரம், புதர்களுக்கு நடுவே படிக்கட்டுகளில் நடந்து வருகிறார். பெரிய சைஸ் பாலிதீன் கவர் போன்ற ஒன்றை எடுத்து விரிக்கிறார். அட ஆச்சரியம்... பாலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் சுத்தமாக தெரியவில்லை. அவருக்கு பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகின்றன. கழுத்துக்கு கீழ் பாலிதீன் கவரை அவர் பிடிக்க, தலைமட்டும் தெரிகிறது. பாலிதீன் கவரை வைத்து 360 டிகிரியில் சுற்றுகிறார். சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை.சென் செய்கு தனது பதிவியில், ‘குவாண்டம் தொழில்நுட்பம் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடை நிச்சயம் ராணுவத்திற்கு பெரும் வரப்பிரசாதகமாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார். வீடியோ எடிட்டிங் நிபுணர்கள் அளித்த பேட்டி, ‘‘இன்விசிபிள் ஆடைக்கு வாய்ப்பே இல்லை. இது வெறும் வீடியோ வித்தைதான். எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இன்விசிபிள் ஆடை என புரளியை கிளப்புகின்றனர்’ என கூறியுள்ளனர். ஆனாலும், இந்த வீடியோவில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு ஆச்சரியமாகவே உள்ளன.

மூலக்கதை