ஐ.எஸ். பிடியில் இருந்து முழுமையாக விடுதலை பெற்ற ஈராக்! அமெரிக்கா பாராட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
ஐ.எஸ். பிடியில் இருந்து முழுமையாக விடுதலை பெற்ற ஈராக்! அமெரிக்கா பாராட்டு

ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை பீடமாக இருந்த ஈராக் நாட்டை அவர்களிடம் இருந்து முழுமையாக விடுவித்துள்ள அந்நாட்டின் அரசுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
 
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. 
 
தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாகவும், தலைமை பீடமாகவும்  அறிவித்து, இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பெயரில் ஆட்சிசெய்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அமெரிக்க விமானப் படையின் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மோசூல் நகரம் சமீபத்தில் முழுமையாக மீட்கப்பட்டது. 
 
அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த மேலும் சில நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு அந்நாட்டி பிரதமர் ஹைதர் அல்-அபாடி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உத்தரவிட்டார். 
 
இதையடுத்து, முன்னதாக மீட்கப்பட்ட மோசூல் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தல் அபர் நகருக்குள் ராணுவ டாங்கிகளுடன் ஏராளமான வீரர்கள் புகுந்தனர். 
 
இந்நிலையில், ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாகவும், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதாகவும், சிரியா - ஈராக் எல்லையோரத்தில் இருந்து அவர்கள் ஒழிக்கப்பட்டதாகவும் ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி நேற்று அறிவித்தார். 
 
இதையடுத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை பீடமாக இருந்த ஈராக் நாட்டை அவர்களிடம் இருந்து முழுமையாக விடுவித்துள்ள அந்நாட்டின் அரசுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 
 
இதுதொடர்பாக, அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹேத்தர் நாவ்ரெட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஐ.எஸ். தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாட்டில் இருந்த இடங்களையும், மக்களையும் மீட்டதன் மூலம் அவர்களால் அறிவிக்கப்பட்ட அரசு ஈராக்கில் இருந்து துடைத்து எறியப்பட்டுள்ளது. 
 
மீண்டும் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளோ, வேறு தீவிரவாத இயக்கங்களோ தலைதூக்காத வகையில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இதற்காக அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஈராக் அரசுக்கு எப்போதும் துணையாக இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மூலக்கதை