பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நாளை பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்தலில் தீவிரவாத குழுக்களின் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின், 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் மீது தற்கொலை படை தாக்குதல்கள், சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை, இத்தேர்தல் சந்தித்துள்ளது.

மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 60 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.   இந்த 60 தொகுதிகளில் 171 பெண்கள் போட்டியிடுகின்றனர். பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இத்தனை பெண்கள் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

மேலும், 5 திருநங்கைகளும் தேர்தலில் களம் காண்கின்றனர். நாட்டில், 10 கோடிக்கும் மேற்பட்டோர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.



முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியே தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாகிஸ்தான் வரலாற்றில், அந்த நாட்டின் எந்த பிரதமரும் இதுவரை தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை.

ராணுவ புரட்சி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று பாதியிலேயே ஆட்சியை விட்டு ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 2013ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.   ஆனால், அவர் பதவியைத் தொடர அனுமதிக்கப்படவில்லை.

ஊழல் குற்றச்சாட்டில் 2017ல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர், தற்போது தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு சிறையில் உள்ளார். இதனால் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சில இடங்களையே கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. நாளை நடக்கும் தேர்தலில், பெரும் எண்ணிக்கையில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தீவிரப்போக்கு உடைய குழுக்கள், பாகிஸ்தானின் மைய நீரோட்ட அரசியலில் அனுமதிக்கப்படுவது, அந்நாட்டில் பெரும் குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை