மகளிர் உலக கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இத்தாலி: அர்ஜென்டினாவிடம் ஸ்பெயின் சரண்

தினகரன்  தினகரன்
மகளிர் உலக கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தியது இத்தாலி: அர்ஜென்டினாவிடம் ஸ்பெயின் சரண்

லண்டன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. லண்டனில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணிக்கு 17வது நிமிடத்தில் பிராகோனி வேலன்டினா அபாரமாக பீல்டு கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார். இதைத் தொடர்ந்து 32வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஓவியடோ லாரா மின்னல் வேகத்தில் கோல் அடித்து அசத்த 2-0 என முன்னிலை அதிகரித்தது.பதில் கோல் அடிக்க சீன வீராங்கனைகள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. 45வது நிமிடத்தில் பந்தை அபாரமாகக் கடத்திச் சென்ற ரக்கியரி கியுலியானா பீல்டு கோல் போட, இத்தாலி அணி 3-0 என முன்னிலை பெற்றது. மேற்கொண்டு கோல் ஏதும் விழாத நிலையில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.சி பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை பந்தாடியது. ஆட்டம் தொடங்கி 3வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணி கோல் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், அதன் பிறகு ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபட்ட அர்ஜென்டினா வீராங்கனைகள் தொடர்ச்சியாக அரை டஜன் கோல் போட்டு மிரட்டினர். 49வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை பெரஸ் பீட்ரிஸ் ஆறுதல் கோல் அடித்தார்.3 புள்ளிகளை தட்டிச் சென்ற அர்ஜென்டினா சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி (3 புள்ளி) அடுத்த இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின் அணிகள் தலா ஒரு தோல்வியுடன் பின்தங்கி உள்ளன. இன்று ஓய்வு நாளாகும். நாளை டி பிரிவில் நடக்கும் லீக் ஆட்டங்களில் ஜப்பான் - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை