5வது போட்டியிலும் ஜிம்பாப்வே ஏமாற்றம் ஒயிட் வாஷ் செய்தது பாகிஸ்தான்: பகார் ஸமான் உலக சாதனை

தினகரன்  தினகரன்
5வது போட்டியிலும் ஜிம்பாப்வே ஏமாற்றம் ஒயிட் வாஷ் செய்தது பாகிஸ்தான்: பகார் ஸமான் உலக சாதனை

புலவாயோ: ஜிம்பாப்வே அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில், 131 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் பைனலில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதியது. முதல் 4 போட்டிகளிலும் வென்று பாகிஸ்தான் 4-0 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது.டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் குவித்தது. பகார் ஸமான் 85 ரன் (83 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), பாபர் ஆஸம் 106* ரன் (76 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். மாலிக், ஆசிப் தலா 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 110 ரன் (105 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் சர்பராஸ் அகமது 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்து 131 ரன் வித்தியாசத்தில் தோற்க, பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. பாபட் ஆஸம் ஆட்ட நாயகன் விருதும், பகார் ஸமான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.விரைவாக 1000:ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1000 ரன் மைல்கல்லை எட்டிய வீரர் என்ற உலக சாதனை பகார் ஸமான் வசமாகி உள்ளது. அவர் தனது 18வது இன்னிங்சிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். விவியன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜொனாதன் டிராட், குவின்டான் டி காக், பாபர் ஆஸம் ஆகியோர் தலா 21 இன்னிங்சில் 1000 ரன் அடித்துள்ளனர். ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 5 போட்டியில் மட்டும் பகார் ஸமான் 515 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது (2ல் மட்டுமே அவுட், சராசரி 257.50). இந்த வகையில் இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு (558 ரன்) அடுத்து 2வது இடத்தை ஸமான் பிடித்துள்ளார்.

மூலக்கதை